அ.இ.அ.தி.மு.க கவுன்சிலர் கணவர் படுகொலை!- மதுரையில் பதற்றம்!

ராஜேந்திரன்

மதுரையில் அ.இ.அ.தி.மு.க வட்டச் செயலாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை, வசந்தநகர், வெங்கடாஜலபுரம் பகுதியைச்  சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 56) இவர் மதுரை 77-வது  வார்டு அ.இ.அ.தி.மு.க வட்டச்செயலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி ஜெயலட்சுமி அந்தப்  பகுதி அ.இ.அ.தி.மு.க கவுன்சிலராக உள்ளார். ராஜேந்திரன் இன்று காலை 5.45 மணியளவில் வெங்கடஜலபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜேந்திரனை சரமாரியாக வெட்டியது. தலை, கழுத்து உள்ளிட்ட 8 இடங்களில் பலத்த வெட்டு விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் ராஜேந்திரன் துடிதுடித்துப்  பலியானார்.

கொலையாளிகள் உடனடியாகத்  தப்பி ஓடி விட்டனர். ராஜேந்திரன் கொலை செய்யப்பட்ட தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. கவுன்சிலர் ஜெயலட்சுமி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேந்திரனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

உடனடியாக ஆண்டாள்புரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்காக ராஜேந்திரன் உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ராஜேந்திரனை கொலை செய்த கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகிறார்கள்.

-கே.பி.சுகுமார்.