சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஜெ.ஜெயலலிதா, மகேந்திரன் உள்பட 28 பேர் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27–ந் தேதி நடைபெறுகிறது.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3–ந் தேதி தொடங்கி 10–ந் தேதி வரை நடைபெற்றது. இதில், மொத்தம் 53 மனுக்கள் பெறப்பட்டன.
11–ந் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முதல்–அமைச்சர் ஜெ.ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன் ஆகியோருடைய மனுக்கள் உள்பட 32 பேருடைய மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.
வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையிலும், தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் தங்கள் மனுவை திரும்ப பெறுவதற்கு நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சுயேச்சை வேட்பாளர்கள் எஸ்.சுப்பிரமணியன், கே.சண்முகம், எம்.சந்திர மோகன் ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரி சவுரிராஜனிடம், தேர்தல் போட்டியில் இருந்து தாங்கள் விலகிக்கொள்வதாக கூறி நேற்று மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக 2 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த தமிழ் மாநில கட்சி வேட்பாளர் ஆர்.சி.பால்கனகராஜ் வேட்புமனு வாபஸ் முடிவடையும் தருவாயில் நேற்று மாலை தனது மனுவை வாபஸ் பெற்றார்.
வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகிக்கொண்டதை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெ.ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன் உள்பட 28 பேர் களத்தில் உள்ளனர். ஜெ.ஜெயலலிதா, சி.மகேந்திரன் மற்றும் 26 சுயேச்சை வேட்பாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று மாலையில் வெளியிட்டது.
ஆர்.கே.நகர் தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 2 பயன்படுத்தப்பட உள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்கள் படம், பெயர், சின்னம் பதிவு செய்யும் பணி 16–ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-கே.பி.சுகுமார்.