ஏற்காட்டில் இன்று மாலை 3 மணி முதல் பலத்த சூறை காற்று வீசியது. பின் அரை மணி நேரத்திற்கு பின்னர் கன மழை பெய்ய துவங்கியது. இந்த மழை இரவு 7 மணி வரை கொட்டி தீர்த்தது.
இதனால், ஏற்காடு படகு இல்ல சாலை, கொம்மக்காடு, பட்டிப்பாடி, நாகலூர் உள்ளிட்ட கிராமங்களிலும், ஏற்காடு மலைப்பாதையிலும், சாலையின் குறுக்கிலும், ஏராளமான மரங்கள் மின் கம்பிகள் மீது சாய்ந்தது. இவைகளை ஏற்காடு மின்வாரியம் மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் அகற்றினர். இதனால் ஏற்காடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஏற்காடு படகு இல்லத்திற்கு அருகில், அருணாசலம் என்பவர் நடத்திவரும் டீ கடை மீதும், பட்டிபாடி கிராமத்தில் மதியழகன், பாலன் மற்றும் ராணி ஆகியோரின் வீடுகளின் மீதும் மரங்கள் விழுந்து பெருத்த சேதத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஏற்காடு அண்ணா பூங்கா அருகில் கடந்த வாரம் நடைப்பெற்ற மலர்காட்சிக்கு வரவேற்பு கோபுரம் வைக்கப்பபட்டிருந்தது. அதை அண்ணா பூங்கா நிர்வாகத்தினர் அகற்றாமல் விட்டனர். இந்த கோபுரம் இன்று பெய்த மழையினால் சாலையின் குறுக்கே சாய்ந்தது. இதனால் இந்த சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொம்மக்காடு கிராமத்திற்கு செல்லும் வழியில் மழையினால் விழுந்த ராட்ஷச மரத்தை அகற்ற நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் வராததால், காத்திருந்த பொதுமக்களை திரட்டி, மஞ்சக்குட்டை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் அகற்றினார்.
-நவீன் குமார்.