சேலம் செவ்வாய்பேட்டை, பால்மார்கேட் பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் மகன் ஹரிபிரசாத் (வயது 30), மற்றும் மணி மகன் கனகராஜ் (வயது34). இருவரும் திருமணமாகாதவர்கள். இவர்கள் இருவரும் இன்று காலை ஏற்காட்டிற்கு யமாஹா ஆர்.எக்ஸ் 135 ஜி இருச்சக்கர வாகனத்தில் சுற்றுலா வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் ஏற்காட்டில் மது அருந்திவிட்டு, ஏற்காடு பகுதியை சுற்றி பார்த்துள்ளனர். மாலை 4 மணியளவில் இவர்கள் ஏற்காட்டில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். பைக்யை கனகராஜ் ஓட்டியுள்ளார், ஹரிபிரசாத் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.
இவர்கள் ஏற்காடு மலைப்பாதையில் 16 – ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டு இருக்கும் போது, வேகமாக வண்டியை ஓட்டியதால், வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் சாலையோரம் இருந்த தடுப்பு கம்பியில் மோதினர்.
இதில் கனகராஜ் தலை தடுப்பு கம்பியில் வேகமாக மோதியதால் தலை வெட்டி, மூளை வெளியில் விழுந்தது. இதனால் கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னால் அமர்ந்து வந்த ஹரிபிரசாத்தின் கால் தடுப்பு சுவற்றில் மோதியதால் கால் துண்டானது. இவர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு காவல் ஆய்வாளர் குமார் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகிறார்.
ஏற்காடு காவல் துறையினர் இன்று மாலை வரை ஏற்காடு வனதுறை அலுவலகம் அருகில், மலைப்பாதை துவங்கும் இடத்திலேயே வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது விபத்துக்குள்ளான வாகனத்தையும் சோதனை செய்திருக்க வேண்டும், அப்படி செய்திருந்தால் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், காவல் துறையினர் சரியானபடி சோதனை செய்யாமல் கோட்டை விட்டனர்.
-நவீன் குமார்.