ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் முரளி, ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்ததாக ஏற்காடு டவுன் வார்டு கவுன்சிலர் ரங்கநாதன் ஏற்காட்டின் பிரதான பகுதிகளில் போஸ்டர் ஒட்டியதால் ஏற்காட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாயத்திற்கு குடிநீர் மோட்டார் வாங்கியது, புதிய தெருவிளக்கு வாங்கியது, புதிய பைப்லைன் வாங்கியது, பைப்லைன் பராமரித்தல், குப்பை மற்றும் முட்செடிகள் அகற்றியது, மோட்டார் வாங்கியதற்காக கம்பெனிக்கு செக் வழங்காமல் கணேசன் எனும் தனிநபருக்கு வழங்கியது, மேலும் பொது சுகாதாரம், வாகன பராமரிப்பு, புதிய ஆழ் துளை கிணறு, பினாயில், கழிப்பிடம் சுத்தம் செய்தல், வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி உள்ளிட்டவைகளுக்கு வரி நிர்ணயம் செய்தல், உள்ளிட்டவைகளில் ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் முரளி ஒரு கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த தகவல்கள் அனைத்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டதாகவும், ஊழல் செய்தவர் மீதும், ஊழலுக்கு துணைப் போன அதிகாரிகள் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா? ஊழல் பட்டியல் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
போஸ்டர் ஒட்டிய சில மணி நேரங்களிலேயே சிலர் போஸ்டர்களை கிழித்து விட்டனர். இதனால் ஏற்காட்டில் சில மணி நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
-நவீன் குமார்.