சிங்கப்பூரில் குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் 50-வது ஆண்டை நினைவுகூரும் வகையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், புதிய அஞ்சல் தலை தொகுதியை வெளியிட்டார். டெக் கீ சமூகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் புதிய அஞ்சல் தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
மேலும், சிங்கப்பூரின் பொன்விழா ஆண்டையொட்டி 1.2 மில்லியன் வீடுகளுக்கு அன்பளிப்புப் பைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இன்னும் சில வாரங்களில் பைகளை விநியோகிக்கும் வேலைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டு 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சிங்கப்பூர், பொன் விழாவை பலவகையில் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு கட்டமாக சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கும் மற்றும் நிரந்தரவாசிகளுக்கும் தேசிய நாள் அணி வகுப்பில் அன்பளிப்புப் பைகள் வழங்கப்படவிருக்கின்றன. இந்தப் பைகள் தேசிய நாள் அணிவகுப்பில் மட்டுமே விநியோகிக்கப்படுவது வழக்கம்.
அன்பளிப்புப் பைகளை தயார் செய்வதற்காக மாபெரும் தளவாட நடவடிக்கைகள் இம்மாதம் ஏற்பாடு செய்யப்பட்டன. அதனையொட்டி அன்பளிப்புப் பைகள் தயார் செய்யப்படும் பணிகளை சிங்கப்பூர் ராணுவம் சிறப்பாக செய்துள்ளது.
ஒவ்வொரு நாளும் 500 முதல் 700 வீரர்கள் அன்பளிப்புப் பைகளை தயார் செய்தனர். இந்த வகையில் அன்றாடம் 120,000 அன்பளிப்புப் பைகளைத் தயார் செய்வது இலக்கு. அன்பளிப்புப் பைகள் அனைத்துப் பொருட்களும் இருப்பதை உறுதி செய்ய 28 உற்பத்தி வரிசைகளும் அமைக்கப்பட்டது.
தேசிய சேவையாளர்கள் பலர் பெரிய பெரிய பெட்டிகளை நகர்த்தி, பைகளில் பொருட்களைப் போட்டு கடுமையாக உழைத்தனர். இந்நிலையில் பைகளைத் தயார் செய்யும் பணி நேற்று பிற்பகல் நிறைவு பெற்றது.
-ஆர்.மார்ஷல்.