இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவரும், தொலைநோக்குப் பார்வை கொண்ட விஞ்ஞானியுமான பாரத ரத்னா டாக்டர் A.P.J. அப்துல்கலாம் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவரும், மிகச் சிறந்த உந்துசக்தியாக விளங்கிய விஞ்ஞானியும், தமிழ்நாட்டின் அன்பிற்குரிய மைந்தருமான பாரத் ரத்னா டாக்டர் A.P.J. அப்துல் கலாம் திடீரென மறைந்தது குறித்து அறிய வந்ததும், ஆழ்ந்த துயரமுற்றேன்.
முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாம், சுதந்திர இந்தியாவின் பொதுவாழ்வில் குறிப்பிடத்தக்க மனிதர்களில் ஒருவராக விளங்கியவர்.
எளிமையான பின்புலத்தைக் கொண்ட குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், ராமேஸ்வரத்தில், மிகவும் பின்தங்கிய ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தனது விடாமுயற்சி, கடும் உழைப்பு மற்றும் அறிவாற்றலால் உயர்ந்த சிகரத்தைத் தொட்டவர்.
இந்தியாவின், விண்வெளி அறிவியல், ஏவுகணைத் தொழில்நுட்பம் மற்றும் அணுசக்தி திட்டங்களில் அவரது பங்களிப்பு பெரிதும் அறியப்பட்ட ஒன்று. உலக அரங்கில், தனது தொலைநோக்குப் பார்வையால், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் இந்தியாவை பெருமை மிக்க இடத்திற்கு கொண்டு சென்றவர்.
இந்தியா, அணுசக்தி துறையில், சுயசார்பும், பொறுப்பும் மிக்க இடத்தை அடையும் வகையில், பெரிதும் வலுவூட்டியவர். இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின், செயற்கைக்கோள் ஏவும் வாகன மேம்பாட்டுக் குழுவிற்கு தலைமை தாங்கியவர்.
மேலும், அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறையின், ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியவர்.
இந்திய மக்களுக்கு, குறிப்பாக, சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்கான ஆதார சக்தியாக விளங்கியவர்.
அனைத்து இந்தியர்களுக்காக மிகவும் ஆர்வத்துடன் எழுதியும், பேசியும் வந்த அவர், இந்தியாவின் மிகச்சிறந்த அடையாளமாகத் திகழ்ந்தார்.
தனது எளிமை மற்றும் இனிய பண்புகளால் அனைவரது இதயத்தையும் தொட்டவர். அவர், அனைவரைவிடவும், இந்தியாவின் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மிகச்சிறந்த தேசபக்தர். தொழில்நுட்பத்தை கிராமப்புற ஏழை மக்களுக்கு பயன்படுத்துவதற்கான சிந்தனைகள், அவரது மூளை முழுக்க நிரம்பியிருந்தன. அவரது இழப்புக்காக ஆழ்ந்த துயரம் அடைவதில், ஒவ்வொரு இந்தியருடனும், தமிழர்களுடனும் தம்மை இணைத்துக் கொள்வதாக தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-ஆர்.அருண்கேசவன்.