தோட்டக்கலை துறைக்கு சொந்தமான நிலங்களை குத்கைக்கு விட்ட ஏற்காடு பி.டி.ஓ:ஏற்காட்டில் அரங்கேறும் அவலங்கள்!  

தோட்டக்கலை துறைக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடம்.

தோட்டக்கலை துறைக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடம்.

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சேலம் மாவட்டம், ஏற்காடு குறிப்பிடதக்கதாகும். இங்கு விடுமுறை நாட்கள் மட்டும் இல்லாமல், அனைத்து நாட்களிலும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு ஏற்காடு படகு இல்ல ஏரிக்கு அருகில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான நிலங்களை 2010 ஆம் ஆண்டு ஏற்காடு ஆணையராக இருந்த விஜயன், சர்வே எண்: 6/10-ல் உள்ள 0.75 சென்ட் நிலத்தை ஏற்காடு பிரபுராம் என்பவருக்கும், தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆணையாளராக இருந்த ஜெயராமன் திருச்செந்தூரை சேர்ந்த வள்ளிநாயகம் என்பவருக்கும், சர்வே எண்:  6/11 ல் உள்ள 600 சதுர அடி நிலத்தை ஏற்காடு ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதால் குத்தகைக்கு விட்டுள்ளனர்.

ye2907P1 ye2907P2

இவ்வாறு குத்தகைக்கு எடுத்த நிலத்தை பிரபுராம் என்பவர், சுமார் 3000 சதுர அடி அளவில் கட்டிடத்தையும், வள்ளி நாயகம் என்பவர் 1600 சதுர அடி அளவிலான கட்டிடத்தையும் கட்டியுள்ளனர்.

இது குறித்து ஏற்காடு பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் வாயிலாக பெற்ற தகவல்களில், அந்த நிலங்கள் ஏற்காடு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான நிலங்கள் என்றும், அவற்றை தோட்டக்கலை துறையினரே குத்தகைக்கு, வாடகைக்கு விடக்கூடாது, மேலும், அந்த நிலங்களை அவர்கள் கோடை விழா நடத்துவதற்காக பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலங்கள் குறித்து ஏற்காடு வருவாய் துறை தலைமை சர்வேயர் சத்திய மூர்த்தி தலைமையில், ஏற்காடு டவுன் வருவாய் ஆய்வாளர் கணேசன், ஏற்காடு கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் ஆனந்த் உள்ளிட்டோர், அடங்கிய குழுவினர், முறைகேடு நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு சென்று, நிலங்களை அளந்து 6/10, மற்றும் 6/11 ஆகிய சர்வே எண் உடைய நிலங்கள் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான இடங்கள் என உறுதி செய்தனர்.

இது குறித்து காமராஜ் கூறியதாவது: ஏற்காட்டில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான நிலங்களை தோட்டக்கலை துறையினரே குத்தகைக்கு விட முடியாத நிலையில், ஏற்காடு ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஏற்காடு பி.டி.ஓ.க்கள் நிலங்களை குத்தகைக்கு விட்டுள்ளனர். இது குறித்து தமிழக முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஆதாரங்களுடன் மனு அளித்துள்ளேன். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ye2907P3

இது குறித்து தோட்டக்கலை துறை மேலாளர் குமார் கூறியதாவது: சிட்டா அடங்களில் அந்த நிலங்கள் தங்கள் நிலம்தான் என உறுதியாகியுள்ளது. எனவே, அந்த நிலம் குறித்து தங்கள் துறை இணை இயக்குனர் ஆணை வந்தபின் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம் என்றார்.  

-நவீன் குமார்.