1999-2010 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27.9 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக ஆ.ராசா மீது சி.பி ஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
ஆ.ராசாவின் வீடு, அவரது சகோதரர் அலுவலகம் உட்பட 20 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தியுள்ளனர்.
2011-ல் சி.பி.ஐ. தொடர்ந்த 2-ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, மத்திய முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெஹுரா, ராசா அமைச்சராக இருந்தபோது அவரது தனிச் செயலராகப் பணியாற்றிய ஆர்.கே. சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் ஷாஹித் உஸ்மான் பால்வா, டி.பி.ரியாலிட்டி நிறுவனர் வினோத் கோயங்கா, யூனிடெக் வயர்லெஸ்-தமிழ்நாடு நிறுவன மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திரா,
ரிலையன்ஸ் ஏடிஏஜி நிறுவன இயக்குநர்கள் கௌதம் தோஷி, சுரேந்தர் பிப்பாரா, ஹரி நாயர், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, குசேகான் ஃபுரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன இயக்குநர்கள் ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத் குமார், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகிய 14 பேர் மீதும், ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ்-தமிழ்நாடு ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதும் சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சைனி விசாரித்து வருகிறார்.
இந்நிலையில், ஆ.ராசா தனது பதவிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ததாக சி.பி.ஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. 2-ஜி வழக்கின் தொடர்ச்சியாகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இன்று காலை முதலே டெல்லி, பெரம்பலூர், சென்னை, என்று நாடு முழுவதும் 15 இடங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தியுள்ளனர். ஆ.ராசாவின் வீடு, அவரது சகோதரர் வீடு, அவரது நண்பர் சாதிக் பாட்சாவின் மனைவி வீடு, சாதிக் பாட்சாவின் நண்பர் சுப்புடுவின் வீடு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தியுள்ளனர்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.