சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் வரலாற்றுப் பழமை வாய்ந்த புனித ஸ்தலமான மெக்கா மசூதி மீது, ராட்சத கிரேன் ஒன்று 11.09.2015 இரவு இந்திய நேரப்படி 11 மணிக்கு சரிந்து விழுந்ததில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 9 பேர் இந்தியாவிலிருந்து புனித பயணம் மேற்கொண்டவர்கள் என்று தெரிகிறது.
மெக்காவில் உள்ள பெரிய மசூதியை விரிவுபடுத்தும் பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் 11.09.2015 வெள்ளிக் கிழமை பிற்பகல் தொழுகைக்காக ஏராளமானோர் மசூதிக்கு வந்திருந்தனர். மசூதியை சுற்றிலும் ஏராளமான ராட்சத கிரேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த நேரம், பலத்த இடியுடன் மழையும் வலுத்து பெய்து கொண்டிருந்தது. இதனால் யாத்திரிகள் அனைவரும் ஒரே இடத்தில் திரண்டிருந்தனர்.
அப்போது மசூதியின் மூன்றாவது தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக மசூதியின் மீது சரிந்தது. இதில் மசூதியின் கூரை பலத்த சேதமடைந்து மசூதிக்குள் இருந்தவர்கள் மீது கிரேன் விழுந்தது. இதில் 100 -க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து சவுதி அரேபியா அரசு தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.
-ஆர்.மார்ஷல்.