சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.சி பள்ளி நிர்வாக கூட்டமைப்பின் முதலாமாண்டு நிறைவு விழா மற்றும் கணக்கு ஒப்படைத்தல் நிகழ்வு நடைப்பெற்றது. இந்த கூட்டமைப்பு கடந்த 2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பில் தற்போது தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களை சேர்ந்த 160 பள்ளிகளின் நிர்வாகிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தேசிய திறந்தவழி பள்ளிகளின் மத்திய மேம்பாட்டு துறையின், மண்டல இயக்குனர் ரவி, கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிகழ்ச்சியை கூட்டமைப்பின் கௌரவ தலைவர் கோபாலன் வாழ்த்துரை வழங்கி துவக்கி வைத்தார். பின்னர் கூட்டமைப்பின் தலைவர் மனோகரன் அமைப்பின் சாராம்சங்கள், குறிக்கோள்கள், செயல்பாடுகள் மற்றும் அமைப்பின் முயற்சிகள் போன்றவற்றை விளக்கி பேசியதாவது:
கடந்த ஆண்டு வரை தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவர்களுக்கு தமிழ் புத்தகங்கள் மிகவும் தாமதமாக கிடைத்து மிகுந்த சிரமத்திற்காளாகினர். நமது அமைப்பின் முயற்சியால் இந்த ஆண்டு புத்தகங்கள் தமிழக அரசினால் உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்றது. மேலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் தேர்வு முடிவுகள் தாமதமாக வெளிவருவதால் மாணவர்கள் கல்லூரிகளுக்கு சேருவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்சனையை நமது அமைப்பின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்து சென்று தேர்வு முடிவுகள் விரைவில் வெளிவர வகை செய்வோம். மேலும், கூட்டமைப்பின் இணையதளத்தை அறிமுகம் செய்து இந்த இணையதளத்தில் கல்விதுறை சார்ந்த அனைத்து தகவல்களையும் பெற்றுகொள்ளமுடியும்” என்றார்.
நிகழ்ச்சியில் விஜய் டி.வி.நீயா? நானா? புகழ் கோபிநாத், கலந்து கொண்டு இன்றைய காலநிலையில் பள்ளிகள் எவ்வாறு மாணவர்களை வழிநடத்த வேண்டும் என்பது குறித்து கூட்டமைப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இவ்விழாவின் ஏற்பாடுகளை கூட்மைப்பின் துணை தலைவர்கள் தனசேகர், தேனருவி, சத்திய மூர்த்தி, ஆர்த்தி துணை செயலர் அருள் ஆகியோர் செய்திருந்தனர்.
-நவீன் குமார்.