முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் கருப்புப் பணத்தால்தான், தமிழ்நாட்டில் பிரபல வாசன் கண் மருத்துவமனை தொடங்கப்பட்டது என்றும், அதன் காரணமாக கார்த்திக் சிதம்பரம் மீது, கருப்புப் பணப் பரிமாற்றம் மற்றும் முறைகேடான பணப்பரிவர்த்தனை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்படும் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
டாக்டர் ஏ.எம். அருண் மற்றும் அவரது மனைவி மீராஅருண் ஆகியோரை பங்குதாரர்களாகக் கொண்டு, தமிழ்நாட்டில் வாசன் கண் மருத்துவமனை கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஏலச்சீட்டு நடத்தும் பிரபல நிறுவனத்திடமிருந்து ரூ.8.56 கோடி பெற்று அதை முதலீடாகக் கொண்டு தொடங்கப்பட்ட வாசன் கண் மருத்துவமனை, பங்கு ஒன்றுக்கு ரூ.100 என்றும், அதற்கான காப்பீட்டுக் கட்டணம் ரூ.100 என்றும் மதிப்பிடப்பட்ட நிலையில், 27 லட்சம் பங்குகளை வெளியிட்டது.
அதேநாளில், துவாரகநாதன் என்பவருக்கு 3 லட்சம் பங்குகள் வழங்கப்பட்டன. அடுத்த 48 மணிநேரத்தில் இந்த துவாரகநாதன், காப்பீட்டுக் கட்டணம் எதுவும் பெறாமலேயே, ஒன்றரை லட்சம் பங்குகளை அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன், கார்த்திக் சிதம்பரத்திற்குச் சொந்தமான Advantage Strategic Consulting Private Limited என்னும் பினாமி நிறுவனத்திற்கு மாற்றிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அடுத்த 3 ஆண்டுகளில் கார்த்திக் சிதம்பரத்தின் பணப்பரிமாற்ற அளவு 38 மடங்காக உயர்ந்து, சொத்தின் மதிப்பு மொத்தம் ரூ.230 கோடி ஆனதாக, இந்த பங்குப் பரிமாற்றம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் வருமானம் குறித்து விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறை கண்டுபிடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல வாசன் கண் மருத்துவமனைக்கு, ஏலச்சீட்டு நிறுவனத்தின் பெயரில், ரூ.8.56 கோடி கருப்புப் பணம் தந்தவர், கார்த்திக் சிதம்பரம்தான் என்பதை அமலாக்கத்துறைக் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்அடிப்படையில், பிரபல வாசன் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஏ.எம்.அருண் மற்றும் துவாரகநாதன் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கார்த்திக் சிதம்பரத்திற்கும் சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தப்பட்டு, கருப்புப் பணப் பரிமாற்றம் மற்றும் முறைகேடான பணப்பரிவர்த்தனை ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்குத் தொடர அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com