ஜாதி மாறி காதலித்ததற்காக தலித் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜை படுகொலை செய்தது தொடர்பாக, போலீசார் தேடி வரும் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவன தலைவரான யுவராஜ் தலைமறைவாக உள்ள நிலையில், கோகுல்ராஜ் கொலைசெய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்து வந்த திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
கொலை குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ், காவல்துறைக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அறிக்கை வெளிட்டு வரும் நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டது உண்மையிலுமே வேதனை அளிக்கிறது.
விஷ்ணு பிரியா விபரீத முடிவை எடுத்து விட்டாரோ என்று தான் என்ன தோன்றுகிறது. தன் தற்கொலைக்கு எது காரணமோ அதை வீழ்த்துவதற்கு விஷ்ணு பிரியா முயற்சித்திருக்க வேண்டும். அதை செய்யாமல், இப்படி அநியாயமாக தன் உயிரை மாய்த்து கொண்டது அவர் வகித்த பதவிக்கு அவமானம். அவர் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும் அவர் உயிரை கூட காப்பாற்றி கொள்ள உதவவில்லை என்பதை நினைக்கும்போது நெஞ்சம் கனக்கிறது.
இந்நிலையில், விஷ்ணு பிரியா மரணத்திற்கு, யுவராஜ் தலைமையில் செயல்பட்டு வரும், தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளது.
யார் இந்த யுவராஜ்?
‘தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை’ என்ற பெயரில் சாதி அமைப்பு ஒன்றை நடத்திவரும் யுவராஜ், திருச்செங்கோடு பகுதியில் இளம் வயது ஆணும் பெண்ணும் ஜோடியாக நடந்து சென்றாலே, பிடித்து விசாரிப்பார். இருவரும் வேறு, வேறு சாதியினராக இருந்தால் எச்சரிப்பதும், அடித்து உதைப்பதும் அடிக்கடி நடக்கும். திருச்செங்கோடு பகுதியையே தன் கலாசாரக் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கும் யுவராஜ், இதற்கு என தனி இளைஞர் படையையும் வைத்திருக்கிறார். ஏற்கெனவே எழுத்தாளர் பெருமாள்முருகனை டார்ச்சர் செய்ததில் இந்த யுவராஜும் ஒருவர். ஓமலூர் சுற்றுவட்டாரக் காவல் நிலையங்களில், ஈமு கோழி மோசடி உள்பட பல வழக்குகள் யுவராஜ் மீது நிலுவையில் இருக்கின்றன. ஆனால், அந்த வழக்குகள் ஏதோ கொங்கு கவுண்டர் சாதிக்காக உழைத்ததால் போடப்பட்டவை என்பதைப்போல காட்டிக்கொண்டு, இவர் ஒரு சாதிப் பிரமுகராக உலா வந்தார்.
ஆரம்ப காலத்தில் ஜே.சி.பி இயந்திரங்களை வெச்சு பிசினஸ் பண்ணிய யுவராஜ் அதுல நஷ்டம் வந்ததும், ஈமு கோழி பக்கம் போனார். அதுலயும் பிரச்னை. பிறகு காதல் பிரச்னைகள்ல தலையிட ஆரம்பிச்சார். அதற்கு தீரன்சின்னமலை கவுண்டர் பேரவையை பயன்படுத்தி வந்தார்.
இப்படிப்பட்ட ஒரு நபரை இவ்வளவு காலம் காவல்துறை கண்டு கொள்ளாமல் இருந்தது கவலைக்குரிய விசயம் மட்டுமல்ல, கண்டணத்திற்குரிய விசயம்.
தமிழக முதல்வரும், தமிழக உள்துறை அமைச்சருமான ஜெ.ஜெயலலிதா தமிழக காவல்துறையினருக்கு முழுமையான சுதந்திரம் அளித்துள்ளார்.
ஆனால், ஒரு சில காவல்துறை அதிகாரிகள் தங்களின் தனிப்பட்ட ஆதாயத்திற்காக குற்றவாளிகளிடம் விலை போய் விடுகிறார்கள். நேர்மையான அதிகாரிகளையும் நிம்மதியாக வேலை செய்ய விடாமல் மிரட்டுகிறார்கள். அவற்றின் விளைவுதான் இதுப்போன்ற சம்பவங்கள்.
–டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com