கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி. பூகோள ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் அது இந்தியாவுக்கு சொந்தமானது. எங்கள் பாரம்பரிய பகுதியான பாக்ஜலசந்தியில் மீன் பிடிப்பதை தடுப்பதையும், வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதையும் ஏற்கமுடியாது: தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா,  பிரதமர் நரேந்திரமோதிக்கு கடிதம்!

jjpr230915_465pr230915_4652

கடந்த 21.9.2015 அன்று நாகப்பட்டினத்தில் இருந்து 2 படகுகளில் சென்று கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறைக்கு கொண்டு சென்று ஜெயிலில் அடைத்துள்ளனர்.

பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பாக்ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. காலங்காலமாய் அங்கு மீன் பிடிப்பது தமிழர்களின் உரிமையாகும்.

ஏற்கனவே கைது செய்த மீனவர்கள் பலரை விடுவித்த நிலையிலும், அவர்களிடம் இருந்து கைப்பற்றிய 26 படகுகளை இன்னும் விடுவிக்காமல் அங்கேயே வைத்துள்ளனர். ஏழை மீனவர்களான அவர்கள் இதை வைத்துதான் பிழைப்பு நடத்தி வந்தனர். நீண்டகாலமாக படகுகளை அங்கு நிறுத்தி வைத்திருப்பதால் அவை பழுதாகி இனி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு நிரந்தரமான இழப்பை ஏற்படுத்தும்.

1974 மற்றும் 1976–ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்தியா–இலங்கை ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்று எங்கள் அரசு பலமுறை வற்புறுத்தி உள்ளது. இந்தியா– இலங்கை இடையே கடல் எல்லையை சர்வதேச எல்லையாக கருதக்கூடாது என்றும் நாங்கள் வற்புறுத்தி வந்துள்ளோம். இலங்கை–இந்தியா இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தையும், கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதையும் எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி. பூகோள ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் அது இந்தியாவுக்கு சொந்தமானது. மேலும், லட்சக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்வாதாரமாகவும், பாதுகாப்பு அம்சமாகவும் கச்சத்தீவு உள்ளது.

எனது அரசு மீனவர்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஆழ்கடல் மீன்பிடிப்பில் திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். இதற்காக மத்திய அரசிடம் இருந்து 1,520 கோடி உதவியும் கேட்டுள்ளோம்.

இந்த நேரத்தில் எங்கள் பாரம்பரிய பகுதியான பாக்ஜலசந்தியில் மீன் பிடிப்பதை தடுப்பதையும், வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதையும் ஏற்கமுடியாது. இந்த பிரச்சனையில் தங்கள் அரசு உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணும் என நம்புகிறேன். அதே நேரத்தில் கைதான 15 மீனவர்களையும், இலங்கை பிடியில் உள்ள 28 படகுகளையும் உடனடியாக விடுவிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தனது  கடிதத்தில் கூறியுள்ளார்.

 -டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com