டெல்லியில் டிஎல்எப் வணிக வளாகத்தில் 26.09.2015 சனிக்கிழமை 33 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ஒவ்வொரு பெண்களையும் பின் தொடர்ந்து செல்வதும், பின்னர் திரும்பி வருவதுமாக இருந்துள்ளார்.
இதை கண்டு சந்தேகம் அடைந்த அந்த வணிக வளாகத்தின் மேலாளர் சுனில் ஆரோரா, அந்த வாலிபரை பிடித்து விசாரித்துள்ளார். முன்னுக்கு பின்னாக பதில் அளித்த அந்த வாலிபர் ஒருகட்டத்தில் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்துள்ளார். இதை தொடர்ந்து மேலாளர் சுனில் ஆரோரா, வணிக வளாக பாதுகாவலர்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
அந்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நொய்டாவை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக உள்ளார் என்பதும், அவரது பெயர் ஆஷிஸ் சர்மா (வயது 33) என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
ஆஷிஸ் சர்மா, தனது வலது கால் ஷூவில் கேமிராவை மறைத்து வைத்து குட்டை பாவாடை அணிந்து வரும் பெண்கள் பின்னாடி சென்று ஆபாசமாக படங்களை எடுத்தது தெரியவந்துள்ளது. அவர் ரகசிய கேமிரா மூலம் எடுத்த இந்த வீடியோக்களை, அவர் தனது மொபைல் போனிலும், சமூக வலைதளங்களிலும் பதிவு செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிந்திருக்கிறது.
இதை தொடர்ந்து ஆஷிஸ் சர்மாவிடம் இருந்து ரகசிய கேமிராவையும், மெமரி கார்டையும் போலீசார் பறிமுதல் செய்து சோதித்துள்ளனர். அதில், பல பெண்களுக்கு தெரியாமல் ஆஷிஸ் சர்மா எடுத்த ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆஷிஸ் சர்மாவை கைது செய்த போலீசார், அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354– கீழ் (பெண்ணின் மானத்திற்கு பங்கம் விளைவித்தல்) வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.
-எஸ்.சதிஸ் சர்மா.