பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி போட்டியிட்ட குஜராத் மாநிலம், காந்திநகர் தொகுதிக்குட்பட்ட ஆமதாபாத்தில் நரேந்திரமோதி 30.04.2014 அன்று காலை தனது ஓட்டை பதிவு செய்தார். அவர் வந்த போது குழந்தைகள் முதல் பலரும் அவரது காலை தொட்டு வணங்கினர்.
பின்னர் ஓட்டு போட்டு வெளியே வந்த நரேந்திரமோதி, தனது சட்டையில் எப்போதும் அணிந்திருக்கும் தாமரை பேட்ஜை கையில் எடுத்து தனது விரல் மையை காட்டினார். தொடர்ந்து அவர் தன்னைத்தானே தனது மொபைலில் படமெடுத்து கொண்டார். வாக்குச் சாவடி அருகே செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்தார்.
நரேந்திரமோதியின் இத்தகைய செயலுக்கு காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு கட்சிகளும் தங்கள் தரப்பில் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக முறையான வழக்கு பதியுமாறு தேர்தல் கமிஷன், குஜராத் மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நரேந்திரமோதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வாக்குச் சாவடி அருகே நடந்தது என்ன என்பது குறித்து முழு அறிக்கை தருமாறு மாவட்ட கலெக்டருக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை நரேந்திர மோதி மீறிவிட்டதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நிசாந்த் வர்மா என்பவர் அகமதாபாத் நகர கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, குஜராத் ஐகோர்ட்டில் நிசாந்த் வர்மா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த மாதம் 28-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய அட்வகேட் ஜெனரல் திரிவேதி கால அவகாசம் கேட்டதால், நீதிபதி ஜி.ஆர். உத்வானி அக்டோபர் 6-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய அட்வகேட் ஜெனரல் வராததால், அரசு வக்கீல் மிதேஷ் அமின், மேலும் சற்று கால அவகாசம் கேட்டார். இதனால் வெறுப்படைந்த நீதிபதி ஜி.ஆர்.உத்வானி, இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்றும், வழக்கில் இருந்து தான் விலகிக்கொள்வதாகவும் அதிரடியாக அறிவித்தார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com