தலைமை ஆசிரியர் அவர்களுக்கு…உங்கள் மாணவி கௌசல்யா எழுதிக்கொள்வது. நான் சொல்வது அனைத்தும் உண்மை. உயிரோடு இருந்து சொல்லி இருந்தால் நீங்கள் என்னை நம்பியிருக்க மாட்டீர்கள். அதனால்தான் நான் சாகப் போகிறேன். ரமேஷ் சார் என்னிடம் தப்பாக நடந்துக் கொண்டார். என் மேல் கையை வைத்தார். இதற்காக, அவருக்கு நிச்சயம் தண்டனை கொடுக்க வேண்டும். என் சாவுக்கு அவர் மட்டும்தான் காரணம். வேறு யாரும் இல்லை.
செய்யூரை சேர்ந்த லிட்டில் பிளவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்புப் படிக்கும் கௌசல்யா (வயது17) எழுதியிருக்கும் கடிதம் இது. செய்யூரை அடுத்த தேவனூரில் உள்ள தனது பாட்டி அம்மாகண்ணு வீட்டில் தங்கி கௌசல்யா படித்து வந்தார். கௌசல்யாவின் ஆசிரியர் ரமேஷ் (வயது 40), இவர் தொடர்ந்து கௌசல்யாவுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (08.10.2015) காலை கௌசல்யா பள்ளிக்கு செல்வதற்காக சீருடை அணிந்து இருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. உடனே, அவர் அழுதுக்கொண்டே வீட்டிற்குள் சென்றுவிட்டார். அவரது பாட்டி என்ன நடந்தது என கேட்டும் பதில் சொல்லவில்லை. வீட்டிற்குள் சென்ற கௌசல்யா தூக்கில் தொங்கி தற்கொலை செய்துக் கொண்டார். அவருடைய செல்போனை சோதித்ததில் ஆசிரியர் ரமேஷ் பேசியது தெரியவந்தது. இதற்கு முன்பும் பல மாணவிகளிடம் அவர் தவறாக நடந்துக் கொண்டார் எனவும் மாணவி கௌசல்யா அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.
தன்னை சீரழித்ததாக மாணவி கெளசல்யா உருக்கமாக எழுதிய கடிதம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே கெளசல்யாவின் உடலை மீட்டு, அந்தக் கடிதத்தையும் எடுத்துக்கொண்டு அவரது உறவினர்களும், அந்தக் கிராமத்தினரும் செய்யூர்-மதுராந்தகம் நல்லூர் கூட்டுசாலையில் மறியலில் ஈடுபட்டதுடன் காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனர்.
அதன் பிறகு செய்யூர் காவல் நிலைய ஆய்வாளர் T.K.குமரன், உதவி ஆய்வாளர் பிரேம் குமார் ஆகியோர் ரமேஷை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்து அந்த மனித மிருகத்தை சிறையில் அடைத்துள்ளனர்.
இது தொடர்பாக செய்யூர் காவல் நிலைய ஆய்வாளர் T.K.குமரனிடம் விசாரித்தோம். ஆசிரியர் ரமேஷ் மீது (குற்ற எண்:416/2015) இந்திய தண்டனை சட்டம் பிரிவு 420 (நேர்மையற்ற முறையில் இணங்க செய்தல்), 375 (வன்புணர்ச்சி), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்), ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com