சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு மனைவி, மகன் மற்றும் நண்பருடன் சுற்றுலா வந்தவரின் கழுத்தை அறுத்து விட்டு தப்பியோடிய நண்பர் நேற்று கைது.
சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த முரளி தனது மனைவி, மகன் மற்றும் தனது ஊரை சேர்ந்த சதீஸ்குமார் உடன் ஏற்காடு சுற்றுலா வந்துள்ளார். அங்கு முரளி மற்றும் சதீஸ் குமார் இருவரும் மது அருந்தியதாக தெரிகிறது.
மதியம் சதீஸ் குமார் ஒரு பைக்கில் சேலம் சென்றுள்ளார். மாலை முரளி தனது மனைவி மற்றும் மகனுடன் பைக்கில் சென்றுள்ளார், அப்போது 14-வது கொண்டை ஊசி வளைவில் மிதமிஞ்சிய போதையில் முரளி தடுமாறியபடி தனது பைக்கை ஓட்டியுள்ளார்.
அதனால் முரளியின் மனைவி, தனது மகனுடன் அவ்வழியாக வந்த பேருந்தில் ஏறி சேலம் சென்றுவிட்டார். பின்னர் முரளி சதீஸ்குமாரிடம் போனில் தொடர்பு கொண்டு தன்னை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். அதனால் சதீஸ்குமார் தனது உறவினர் ஒருவருடன் முரளி இருந்த இடத்திற்கு வந்து விட்டு தனது உறவினரிடம் தனது பைக்கை கொடுத்து அனுப்பியுள்ளார். இருவரும் மலைப்பாதையிலேயே சிறிது நேரம் உட்கார்ந்து ஓய்வு எடுத்துள்ளனர்.
இந்நிலையில் சதீஸ்குமார், முரளியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடி விட்டார். அவ்வழியாக வந்தவர்கள் இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த முரளியை மீட்டு ஏற்காடு அடிவாரத்தில் இருந்த ஹைவே காவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் முரளியை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஏற்காடு காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வீராணம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விசாரித்து வந்தனர். இந்நிலையில் ஏற்காடு காவல் துறைக்கு சதீஸ் குமார் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள சாலைப்பாறைக்கு தனது பைக்கை எடுக்க வந்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சாலைப்பாறை கோவிலுக்கு சென்று சதீஸ் குமாரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சதீஸ் குமார் வாக்குமூலம்:
நான் முரளியின் மனைவி நாகலட்சுமி(வயது 26) மீது ஆசைப்பட்டு சிலமுறை அவரை அடைய ஆசைப்பட்டு அவரை அனுகியுள்ளேன். ஆனால், அவர் மறுத்து விட்டார். எனவே முரளி உயிரோடு இல்லையெனில் எனது ஆசை நிறைவேறுமென எண்ணி இதுதான் வாய்ப்பு என்று அவரை கொல்வதற்காக கழுத்தை அறுத்தேன். ஆனால் அவ்வழியாக சிலர் வந்ததால் அவரை விட்டுவிட்டேன் என்றார்.
-நவீன் குமார்.