தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் பலவகை அளவுகளில் வீடுகள் கட்டப்பட்டு அன்றைய முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் 1984 ஆண்டு அண்ணா நகர் என்று பெயரிடப்பட்டு உருவாகியதுதான் திருவெறும்பூர் ஒன்றியம், நவல்பட்டு அருகிலுள்ள அண்ணா நகர். ஆரம்ப காலம் முதல் கடந்த 10 ஆண்டுகள் முன்பு வரை, அண்ணா நகர் எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்த இடமாக இருந்தது.
அமைதிப் பூங்காவாகவும், மிகவும் சிறந்த நந்தவனமாகவும், தூய்மையான இடமாகவும் காணப்பட்டதால், பாய்லர் மற்றும் துப்பாக்கித் தொழிற்சாலை பணியாளர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வீடுகளை வாங்கி குடியேறி வசித்து வருகிறார்கள். போதுமான போக்குவரத்து வசதி இல்லாத போதிலும், பாதுகாப்பான அமைதியான இடம் என்பதால், அண்ணா நகரின் மதிப்பு மக்கள் மத்தியில் குறையவில்லை.
ஆனால், சமீபகாலமாக அண்ணா நகரில் பல இடங்களில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. படித்தவர்கள் அதிகமாய் வாழும் இந்தப்பகுதியில் தெரு விளக்குகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. மழைவரும் நேரங்களில் பல பகுதிகள் மக்கள் நடமாட முடியாமல் ஏரிபோல் காட்சியளிக்கின்றன. தெருக்களில் உள்ள சாலைகளும் பராமரிக்கப்படாமல் குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றன.
வீட்டுவசதி வாரிய கட்டுப்பாட்டில் இருந்த அண்ணா நகர் பகுதி-1 மற்றும் பகுதி-3 1996 ஆம் ஆண்டு முதல் நவல்பட்டு ஊராட்சியோடு இணைக்கப்பட்டுள்ளது. அண்ணா நகர் பகுதி -2 கும்பக்குடி ஊராட்சியோடு இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஊராட்சி நிர்வாகத்தில் சிக்கித் தவிப்பது அண்ணா நகர் பகுதிவாழ் மக்கள். இப்பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் இருக்கின்றன. ஆனால், அதற்கேற்ப பேருந்து வசதிகள் இல்லை. தற்பொழுது குறைந்த எண்ணிக்கையில் வந்து செல்லும் பேருந்துகளும் அவ்வப்பொழுது நிறுத்தப்படுகிறது.
போக்குவரத்துக்கழக நிர்வாகத்திடம் பேசினால் பிரதான சாலை சரியாக பராமரிக்காத காரணத்தை சொல்கிறார்கள். இதனால் மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதற்கெல்லாம் தீர்வு அண்ணா நகரையும், போலிஸ் காலனி பகுதிகளையும் தனி தனி ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்பதே அங்கு வாழும் மக்களின் எதிர்பார்ப்பு. அரசு இதற்கு ஆவண செய்யுமா?
-மா.அந்துவான் சவரிராஜ்.