ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவினால் ஏற்பட்ட சாலை பாதிப்புகளை சீரமைத்து வரும் நெடுஞ்சாலை துறையின் பணிகளை நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கன மழை காரணமாக கடந்த திங்கள் இரவு ஏற்பட்ட மண் சரிவினால் ஏற்காடு செல்லும் கொண்டப்பநாய்க்கன் பட்டி மற்றும் குப்பனூர் ஆகிய இரு மலைப்பாதைகளும் பெரும் பாதிப்புள்ளாகின.
இந்த மண் சரிவுகளில் சிமெண்ட் சிப்ஸ் நிரம்பிய மூட்டைகளை அடுக்கி சாலைகளை வலுப்படுத்தும் பணிகள் கடந்த ஐந்து நாட்களாக நடைப்பெற்று வருகிறது. இந்த சாலைகளில் வெள்ளி முதல் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது.
இந்த மலைப்பாதைகளை சீரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை துறையினர் கடந்த ஐந்து தினங்களாக ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த பணிகளையும், 60 அடி பாலத்தில் ஏற்படும் அதிர்வுகள் குறித்தும் இன்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அதிகாரிகளிடம் 60 அடி பாலத்தில் முறையான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பாலத்திற்கு அடியில் தண்ணீர் தடையின்றி செல்வதற்கு ஏதுவாக வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
பின்னர் 13 மற்றும் 14-வது கொண்டை ஊசி வளைவுகளில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் சிமெண்ட் சிப்ஸ் நிரம்பிய மூட்டைகள் அடுக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், தடுப்பு சுவர் பணிகளையும் உடனடியாக டெண்டர் விட்டு கட்டி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இன்று மலைபாதையின் 13 மற்றும் 14-வது கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் சிமெண்ட் சிப்ஸ் நிரம்பிய மூட்டைகள் அடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நாளை வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-நவீன் குமார்.