ஏற்காடு கூட்டுறவு வங்கியில் அமைச்சர் செல்லூர் ராஜீ ஆய்வு! வாகனங்களை சாலையில் நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல், பொதுமக்கள் அவதி!

ye2011P4ye2011P3 ye2011P2 ye2011P1

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மத்திய கூட்டுறவு வங்கியின் பயிற்சி மையம் கட்டுவதற்காக, கடந்த சில தினங்களாக மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர், இடங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். இதில் மஞ்சக்குட்டை ஊராட்சிக்குட்பட்ட செம்மடுவு கிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த இடத்தை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜீ மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மாநில தலைவர் இளங்கோவன் ஆகியோர் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அதற்கு முன்னர், கூட்டுறவு வங்கியின் ஏற்காடு கிளையில் அமைச்சர் செல்லூர் ராஜீ ஆய்வு செய்தார். அப்போது ஏற்காடு சேர்மேன் அண்ணா துரை, துணை சேர்மேன் சுரேஷ் குமார், ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் முரளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அமைச்சரின் கார் உள்பட 13 வாகனங்கள் வங்கிக்கு வெளியே சாலையில் நிறுத்தியிருந்தனர். அதனால், ஏற்காடு பஸ் நிலையம் முதல் ஏற்காடு டவுண் பகுதி வரை பிரதான சாலையில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அமைச்சர் வங்கியில் ஆய்வு முடித்து புறப்படும் வரை 20 நிமிடங்களுக்கு மேலாக, அவ்வழியாக எந்த வாகனங்களும் இயக்கப்படாமல் வரிசையில் நின்றிருந்தன. இதனால் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது, போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். அப்போதுதான்  மக்களிடம் அரசிற்கு நற்பெயர் கிடைக்கும்.

 –நவீன் குமார்.