மதுபானக் கூடங்களின் உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், அம்மாநில நிதியமைச்சர் கே.எம்.மாணி பதவி விலகினார். இந்த சர்ச்சை அடங்குவதற்குள் கலால் துறை அமைச்சர் கே.பாபு மீது லஞ்சப் புகார் எழுந்துள்ளது.
கேரளத்தில் மதுபானக் கூடங்களின் உரிமத்தைப் புதுப்பிக்க லஞ்சம் பெற்ற புகார் தொடர்பான வழக்கில், கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, அம்மாநில நிதியமைச்சர் கே.எம்.மாணி தனது பதவியை ஏற்கனவே ராஜிநாமா செய்தார். இதையடுத்து, முதல்வர் உம்மன் சாண்டி, நிதி அமைச்சக பொறுப்பை கூடுதலாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
கேரளத்தில் இயங்கி வரும் மதுபானக் கூடங்களின் உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம் பெற்றதாக, அம்மாநில நிதியமைச்சர் கே.எம். மாணி மீதுள்ள வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடத்துமாறு, ஊழல் கண்காணிப்பு நீதிமன்றம் அளித்த உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில் கேரள கலால் துறை அமைச்சர் கே.பாபு மீதும் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
மதுபார்களை மீண்டும் திறக்க அவர் ரூ.10 கோடி லஞ்சமாக பெற்றதாக, கேரள மது பார் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் பிஜூ ரமேஷ் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தன் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறப்படுவதாக அமைச்சர் கே.பாபு தெரிவித்துள்ளார். ரமேஷிற்கு எதிராக அமைச்சர் கே.பாபு அவதூறு வழக்கும் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், கேரள சட்டச்சபையில் நேற்று (01.12.2015) விரிவாக விவாதத்தை எழுப்பினார். இதனால் கேரள சட்டச்சபையில் வாக்கு வாதமும், கூச்சலும் குழப்பமும் நிலவியது.
கேரள அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து வெளியாகி வரும் லஞ்ச விவகாரங்களால், கேரள அரசியலில் மிகவும் பரப்பரப்பான சூழல் உருவாகியுள்ளது.
-சி.ராஜ்.