ஏற்காடு படகு இல்ல ஏரியில் தண்ணீரில் மூழ்கி படகுகள் வீணாவதாகவும், முறையான பராமரிப்பின்மையே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏற்காடு பிரதான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு விடுமுறை தினம் மட்டுமல்லாமல் அனைத்து தினங்களிலும், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இவர்கள் ஏற்காடு வந்ததும், ஏற்காட்டின் நுழைவு பகுதியில் உள்ள படகு இல்ல ஏரிக்கு சென்று படகு சவாரி செய்வதையே விரும்புகின்றனர். ஆனால், படகு சவாரி செய்ய செல்லும் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் அளவிற்கே உள்ளது படகு இல்ல நிர்வாகத்தின் செயல்பாடு.
ஏற்காடு படகு இல்லத்தில் உள்ளே நுழைவதற்கே ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், இங்கு மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகு என மூன்று வகையில் 55 படகுகள் உள்ளன.
படகு சவாரி செய்ய மிதி படகிற்கு ரூ.120, துடுப்பு படகிற்கு ரூ.150, மோட்டார் படகிற்கு ரூ.350 வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது.
இந்நிலையில் இங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு சீருடை ஏதும் வழங்கப்படுவதில்லை. இதனால், ஊழியர்கள் யார்? சுற்றுலா பயணிகள் யார்? என்ற குழப்பம் நிலவுகிறது.
மேலும், இங்குள்ள மிதி படகுகளே சுற்றுலா பயணிகளின் தேர்வாக உள்ளது. இந்த படகுகளில் பல படகுகள் தண்ணீரில் வெகு நாட்களாக மூழ்கி வீணாகின்றன. இவ்வாறு படகுகள் வீணாவதற்கு நிர்வாகத்தின் முறையான பராமரிப்பின்மையே காரணம்.
இவ்வாறு படகுகளை முறையாக பராமரிக்ககாமல் அரசிற்கு அதிகளவிலான வருவாய் இழப்பை நிர்வாகம் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-நவீன் குமார்.