தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனரை கண்டித்து ஏற்காடு பேருந்து நிலையத்தில் பயணிகள் மறியல்!  

ye1012P4

ஏற்காடு பேருந்து நிலையத்தில் சரியான நேரத்திற்கு புறப்பட மறுத்த பேருந்து ஓட்டுநர், நடத்துனரை கண்டித்து பயணிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

ஏற்காடு பேருந்து நிலையத்திற்கு இன்று காலை 10 மணிக்கு எம்.எஸ்.எம்.பி.- எனும் தனியார் பேருந்து வந்தது. சேலம் செல்வதற்காக பொதுமக்கள் பேருந்தில் ஏறினர். பேருந்து 10.35 மணிக்கு சேலம் புறப்பட வேண்டும். ஆனால், பயணிகள் குறைவாக இருந்த காரணத்தால் பேருந்தின் ஓட்டுனர் 11 மணி வரை பேருந்தை இயக்கவில்லை.

இதனால் பொறுமையிழந்த பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி பேருந்து நிலையத்தில் இருந்து எந்த பேருந்தையும் செல்ல விடாமல் மறியலில் ஈடுப்பட்டனர்.

தகவல் அறிந்து வந்த ஏற்காடு காவல் துறையினர், சரியான நேரத்திற்கு பேருந்தை இயக்காத ஓட்டுநர், நடத்துனரை கண்டித்தனர், பயணிகளை சமாதானம் செய்தனர். 

பின்னர் பயணிகளுடன் பேருந்து சேலத்திற்கு புறப்பட்டது. இதனால் சிறிது நேரம் ஏற்காடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது.   

-நவீன் குமார்.