எஸ்.சி.-எஸ்.டி மாணவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள்; உரிய நேரத்தில் நிதி கொடுத்தால்தான் அவர்கள் மேல் படிப்பை தொடர உதவியாக இருக்கும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடிதம்!

jjP.R.No-679-Hon_bleCM to pm

பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் மேற்படிப்புக்காக மத்திய அரசின் திட்டமான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு 100 சதவீத உதவித் தொகையை வழங்குகிறது.

2015-16ல் உயர்கல்வி உதவித்தொகையாக தமிழக அரசு ரூ. 1295.55 கோடியை செலவு செய்துள்ளது. இதில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ. 942 கோடியாகும். 2014-15ல் தமிழக அரசு செலவிட்டதில் மத்திய அரசு ரூ. 1175.10 கோடி தர வேண்டியதுள்ளது. 2015–16-ல் மத்திய அரசு ரூ. 567.34 கோடியைத் தான் தந்துள்ளது. ரூ. 1549.76 கோடியை நிலுவையில் வைத்துள்ளது.

இந்த பணத்தை வழங்குமாறு மத்திய சமூக நீதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியும், மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டில் போதுமான நிதி ஒதுக்கப்படாததால், தமிழகத்துக்கு தர வேண்டிய பணம் இதுவரை வழங்கப்படவில்லை. உயர்கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள் என்பதால், தாங்கள் உரிய நேரத்தில் நிதி கொடுத்தால்தான் அது மாணவர்கள் தங்கள் மேல் படிப்பை தொடர உதவியாக இருக்கும்.

உயர்கல்வி உதவித் தொகையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், இந்த திட்டம் தொடர்பாக மாணவர்களிடம் நம்பகத் தன்மை இல்லாமல் போய் விடும். சமுதாயத்தில் நலிவடைந்த நிலையில் இருப்பவர்கள் கல்வி மூலம் வாழ்வின் உயர்நிலைக்கு வர இந்த திட்டம் மிகவும் முக்கியமான திட்டமாகும்.

இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, சமூக நீதி அமைச்சகத்துக்கு தேவையான நிதியை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உயர்கல்வி உதவித்தொகை திட்டத்துக்காக செலவிட்டதில் 2014-15ம் ஆண்டுக்கான பாக்கித்தொகை ரூ. 607.76 கோடி மற்றும் 2015–16ம் ஆண்டுக்கான பாக்கித் தொகை ரூ. 942 கோடி உள்பட மொத்த நிலுவைத் தொகையான ரூ. 1549.76 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு உடனே தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 – டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com