சேலம் மாவட்டம், ஏற்காடு டவுண், அலங்கார ஏரி அருகில் சுப்புராஜ் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கட்டிடம் கட்டி வருகிறார். இந்த பணிக்காக அருகில் இருந்த சாலையில் கட்டுமானப் பொருட்களான சிமெண்ட், மணல், ஜல்லி உள்ளிட்டவைகளை மலைப்போல் இன்று குவித்திருந்தார்.
இந்த சாலையை அடுத்து கோவில்மேடு, டிப்ரவரி சாலை, உள்ளிட்ட கிராமங்களும் நாசரேத் பள்ளி, புனித ஜோசப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளும் உள்ளன. இவ்வாறு சாலையை மறித்து கட்டுமானப் பொருட்களை குவித்திருந்ததால் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
எனவே,பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்து கட்டிடம் கட்டுபவர்களிடம் பொருட்களை சாலையில் இருந்து எடுக்குமாறு கூறியுள்ளனர். ஆனால், கட்டிடம் கட்டுபவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். பொறுமையிழந்த பொதுமக்கள் அருகில் இருந்த ஏற்காடு மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுப்பட முயன்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் வந்தனர்.
உதவி காவல் ஆய்வாளர் ஹரி கட்டிடம் கட்டுபவர்களிடம் சாலையை மறித்து பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்ககூடாது என கூறி, சாலையில் இருந்த பொருட்களை அகற்ற கூறினார். உடனடியாக சாலையில் குவிக்கப்பட்டிருந்த பொருட்கள் அகற்றப்பட்டது.
மேலும், பொதுமக்கள் கட்டப்பட்டு வரும் கட்டிடம் கட்டிட அனுமதி இன்றி கட்டுவதாகவும், சாலையை மறித்து தங்களுக்கு இடையூறு செய்ததாகவும் வருவாய் ஆய்வாளர் கணேஷிடம் புகார் அளித்தனர்.
புகாரை பெற்று கொண்ட வருவாய் ஆய்வாளர் கட்டிடம் கட்டும் என்ஜினியரிடம் கட்டிடம் கட்ட பெறப்பட்ட அனுமதியை தங்களிடம் காண்பித்த பின்னரே கட்டிடம் கட்டும் பணியை தொடர வேண்டும் என்றும், அதுவரை கட்டிடம் கட்டக்கூடாது என்றும் கூறி சென்றார்.
ஆனால் மீண்டும் சாலையில் பொருட்கள் குவிக்கப்பட்டு மாலையில் திடீரென ஏற்காடு காவல் ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் அடங்கிய காவல் துறையினரின் உதவியுடன் கட்டிடம் கட்டும் பணி நடைபெற துவங்கியது. மாலை மீண்டும் இதுகுறித்து கேட்க சென்ற பொதுமக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல் துறையினர் மிரட்டியுள்ளனர்.
காலையில் சாலையில் இருந்த பொருட்களை அகற்றிய போலீசாரே, மாலையில் கட்டுமான பணிக்கு பாதுகாப்பு கொடுப்பதும், கட்டிடம் கட்ட வேண்டாம் என கூறி சென்ற வருவாய் துறையினர், கட்டுமானப் பணி நடைபெறுவது தெரிந்தும், தெரியாமல் நடந்து கொள்வது, பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-நவீன் குமார்.