பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக மீனவர்கள் 4 பேரை கடந்த 17–ந்தேதி இலங்கை கடற்படை பிடித்து சென்று விட்டது பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதுகிறேன். பாக்ஜல சந்தியில் தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய பகுதியில் அமைதியாக மீன் பிடிப்பதை தடுக்கும் வகையில், இலங்கை கடற்படை அத்துமீறலுடன் நடந்து கொள்வது துரதிர்ஷ்டவசமானது.
சமீபத்தில் பிடித்து செல்லப்பட்டுள்ள 4 மீனவர்களையும் சேர்த்து 41 மீனவர்கள் கடந்த சில வாரங்களாக இலங்கையில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது 56 மீன்பிடி படகுகளை இலங்கை பறிமுதல் செய்து வைத்துள்ளது.
1974 மற்றும் 1976–ம் ஆண்டுகளில் செய்யப்பட்ட இந்தியா – இலங்கை ஒப்பந்தங்கள் காரணமாக தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் திரும்பப் பெற நானும், தமிழக அரசும் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
பாக்ஜல சந்தியில் மீன்பிடிப்பதில் தொடர்ந்து நெருக்கடி ஏற்படுவதால் தமிழக மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் மாற்று முன்னோடி திட்டத்தை வரையறுத்துள்ளது. இதற்காக பெரிய படகுகள் வாங்க ரூ.30 லட்சம் வரை 50 சதவீதம் வரை மானியம் வழங்கும் ரூ.51 கோடி திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடிக்கவும் அதற்கான உள்கட்டமைப்புகளை செய்யவும் ரூ.1520 கோடிக்கு ஒருங்கிணைந்த சிறப்பு நிதி ஒதுக்கீடு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. நான் தாங்களிடம் 03–06–2014 மற்றும் 07–08–2015 அன்று வழங்கிய அறிக்கையில் இதுபற்றி விரிவாக தெரிவித்துள்ளேன். அந்த வகையில் மத்திய அரசின் ஒப்புதலுக்காக நாங்கள் இன்னும் காத்து கொண்டிருக்கிறோம்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கும் நிலையில் தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடுவது கடலோர மக்களிடம் மிகுந்த மனக்குமுறலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, உயர்மட்ட அதிகாரிகள் மூலம் இலங்கையுடன் தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக மீனவர்கள் பிரச்சினை விஷயத்தில் மத்திய அரசு உறுதியாக செயல்பட்டு, தேவையான நடவடிக்கைகளை எடுத்து நமது மீனவர்களின் துயரங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
தாங்கள் இந்த பிரச்சினையில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு, 17–12–2015 அன்று பிடித்து செல்லப்பட்ட 4 மீனவர்கள் உள்பட தமிழக மீனவர்கள் 41 பேரையும் அவர்களது 56 படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசிடம் பேசி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதுபோல எந்திர மீன்பிடி படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இலங்கை கடல் பகுதியில் கடந்த 08–11–2015 அன்று தத்தளிக்க நேரிட்ட 4 தமிழக மீனவர்களையும் அவர்களது படகையும் இலங்கையில் இருந்து உடனே திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com