கர்ப்பிணி பெண்களையும், கருவறையில் இருக்கும் சிசுக்களையும், ஆரோக்கியமாக பெற்றெடுப்பதற்கு, தமிழக அரசு மகத்தானப் பலத்திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஆனால், ஒரு சில மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் கவனக்குறைவால், சில விரும்பதகாத சம்பவங்கள், தமிழகத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வருவது ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
ஏற்காட்டில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செந்திட்டு கிராமம், அந்த கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளியான பவுல் ராஜ் (வயது 25) அவரது மனைவி தனலட்சுமி (வயது 23) இவர் கர்பமான முதல் ஏற்காடு வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 24-ம் தேதி வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற தனலட்சுமியை சோதனை செய்த மருத்துவர்கள், எந்த பிரச்சனையும் இல்லை வயிற்றில் குழந்தை நன்றாக உள்ளது என்று கூறி 31- ம் தேதி பிரசவ தேதி என்று சொல்லி அனுப்பினர்.
அதேபோல் 31-ம் தேதி தனலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்படவே அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அவரை வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அனுமதித்து ஒரு மணி நேரமாகியும் மருத்துவர் வரவில்லை.
அங்கு பணியிலிருந்த செவிலியர் அனிதா, தனலட்சுமியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லுங்கள் என்று கூறி 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அதில் அனுப்பி வைத்துள்ளார்.
108 ஆம்புலன்சில் ஏற்றி ஒரு கிலோமீட்டார் தூரம் சென்றவுடன், தனலட்சுமிக்கு வலி அதிகமாகவே 108 ஆம்புலன்சை நிறுத்திவிட்டு, ஆண் மருத்துவ உதவியாளர் அர்ஜுன், அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து அழகான பெண் குழந்தை பிறந்தது.
மிகவும் மோசமான நிலை இங்கு பிரசவம் பார்க்க முடியாது என்று கூறிய பெண்ணிற்கு 108 ஆம்புலன்சில் ஏற்றிய சில நிமிடங்களில் பிரசவமானதால் மேற்கொண்டு தாயும் சேயும் வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கவேண்டாம் என்று அவரது உறவினர்கள் கேட்டு கொண்டதால், ஏற்காடு அரசு மருத்துவமனையில் இருவரையும் 108 ஆம்பிலன்ஸ் ஊழியர்கள் அனுமதித்தனர்.
இதனால் வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீதிருந்த நம்பிக்கை அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு போய்விட்டது.
மேலும், தனலட்சுமியின் கணவர் பவுல்ராஜ் கூறுகையில், இதை கவனத்தில் கொண்டு இனி யாருக்கும் இப்படி ஒரு நிலை ஏற்படாமல் இருக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினார்.
–நவீன்குமார்.