இந்தியாவின் 67–வது குடியரசு தினம், இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தினவிழா இன்று நடைபெற்றது.
இன்று காலை சென்னையில் போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து தமிழக கவர்னர் ரோசய்யா மரியாதை செலுத்தினார். முப்படை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர். பின்னர் மெரினா கடற்கரையில் கவர்னர் ரோசய்யா தேசிய கொடியை ஏற்றினார். கவர்னர் ரோசய்யா, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து முப்படை அணிவகுப்பு நடைபெற்றது. ராணுவப்படை, கடற்படை, விமானப்படையினரின் அணிவகுப்பு நடந்தது. முப்படை வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பை ஆளுநர் ரோசய்யா ஏற்றுக் கொண்டார்.
முப்படையை தொடர்ந்து போலீஸ் படைகள், கடலோர பாதுகாப்பு குழு, ஆண்,பெண் தமிழ்நாடு கமாண்டோ படை, குதிரைப்படை, சிறைத்துறை படை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, முப்படையின் தேசிய முதுநிலை மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சாரண, சாரணியர் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ரோசய்யா ஏற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, வீர, தீர செயலுக்கான பதக்கங்களை தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வழங்கினார்.
கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், கள்ளச்சாராயத்தை தடுப்பதில் சீரிய பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களையும் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வழங்கினார். வேளாண்துறை சிறப்பு விருது மதுரையைச் சேர்ந்த பெண் பிரசன்னாவிற்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவிகள் வண்ண வண்ண உடையணிந்து நடனம் ஆடி திறமையை வெளிப்படுத்தினர்.
-ஆர்.மார்ஷல்.