அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மகளிரணி துணைச் செயலாளராக பதவி வகித்து வந்த மா.ரா.ஜெமிலா, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக கட்சிக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்பட்டும் வந்துள்ளார். இந்நிலையில் அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருப்பதை அறிந்து, சமூக வலைத்தளங்கள் மற்றும் பத்திரிக்கை வாயிலாக சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.
அதன் அடிப்படையில் மா.ரா.ஜெமிலா மாநில மகளிரணி துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், ஆலந்தூர் தொகுதிச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.
மேலும் இதே அடிப்படையில் நிதி ஆலோசகர் பொறுப்பு வகித்து வந்த டாக்டர் ராஜசேகரும் அப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவர்கள் இருவருடனும் யாரும் கட்சி சம்பந்தப்பட்ட எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் ஆர்.சரத்குமார் கடந்த 20 -ந்தேதி அறிவித்தார்.
இந்நிலையில் மா.ரா.ஜெமிலா தனது தரப்பு நியாயத்தை ஊடகங்கள் மூலம் தெரிவித்து வந்தார். இதைப் பொருத்துக்கொள்ள முடியாத அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பிரமுகர்களும், நடிகர் ஆர்.சரத்குமார் ஆதரவாளர்களும் மா.ரா.ஜெமிலாவை முகநூல் பக்கங்களில் ஆபாசமான வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சித்தும் மிரட்டியும் வருகின்றனர். இதனால் விரக்தியடைந்த மா.ரா.ஜெமிலா இதுக்குறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்க இருப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியில் பொதுச் செயலாளர் பொறுப்பு வகித்து வந்த கரு.நாகராஜன் மற்றும் சிலர் பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைந்ததாக செய்திகள் வந்துள்ளன. ஒரு கட்சியில் இருந்து மற்ற கட்சிக்கு மாறுவது என்பது அவரவர் தனிப்பட்ட உரிமையும் விருப்பமும் ஆகும்.
அதே வேளை கட்சியிலிருந்து ஏற்கெனவே நீக்கப்பட்ட ஜெமிலா, ராஜசேகர், ஷிமோன் கிரீஸ் அதே பொறுப்பில் இருந்து விலகியதாக சொல்லப்படுவது உண்மைக்குப் புறம்பான செய்தி.
எனவே பொதுச் செயலாளர் பதவியிலிருந்த கரு.நாகராஜன், தலைமை நிலையச் செயலாளர் பதவியிலிருந்த ஐஸ் அவுஸ் தியாகு, மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பிலிருந்த ராஜா, பிரசாத் உள்ளிட்டவர்கள் தத்தம் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள்.
மேலும் கட்சி விதிமுறைகளை மதிக்காமல் நடந்ததோடு, அதைப் பலமுறை சுட்டிக் காட்டியும் சிறிதும் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக செயல்பட்டு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த துணைத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ அப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார். மேற்சொன்ன அனைவரோடும் இயக்கத் தோழர்கள் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், நாகபட்டினம் மாவட்டச்செயலாளராக இது வரை செயல்பட்டு வந்த ஏ.பி.ராஜா கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வந்த காரணத்தினால் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருடன் கட்சிநிர்வாகிகள் யாரும் எந்த ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்
இன்று கட்சியிலிருந்து சிலர் விலகியதை அறிந்து, அதை ஒரு பாதிப்பாகக் கருதாமல், என் மீது முழு நம்பிக்கையும், இயக்கத்திற்கு முழு ஆதரவையும் தெரிவித்து பல்லாயிரக்கணக்கான சமத்துவ சொந்தங்கள் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் தங்களது உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதோடு வருங்காலத்தில் இன்னும் முழு வேகத்தோடும், எழுச்சியோடும் பணியாற்றுவோம் என்ற உறுதியையும் தெரிவித்துள்ளார்கள்.
சமத்துவ மக்கள் என்னும் ஒரு விருட்சத்திலிருந்து சருகுகள் சில உதிர்ந்தாலும், அதன் ஆணி வேராக தொண்டர்களும், மாவட்டச் செயலாளர்களும், கட்டுப்பாட்டுடன் கூடிய ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில் நாளை 28.01.2016 சென்னை தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தொகுதிச் செயலாளர்கள் உள்ளடங்கிய அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சட்டமன்ற பொதுத் தேர்தல் குறித்தும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட உள்ளன என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் ஆர்.சரத்குமார் இன்று 27.01.2016 அறிவித்துள்ளார்.
நடிகர் சங்க கணக்கு வழக்கே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் சர்ச்சை நடிகர் ஆர்.சரத்குமாருக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com