சென்னையை சேரந்த கான்கார்ட் மேரிடைம் அன்ட் லாஜிஸ்டிக்ஸ் எனும் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணி புரியும் 100 நபர்கள் சனிக்கிழமை காலை ஏற்காடு சுற்றுலா வந்தனர். இவர்கள் ஏற்காட்டின் பல்வேறு சுற்றுலா பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு ஏற்காடு ஏரி அருகில் உள்ள கிராண்ட் பேலஸ் எனும் தனியார் தங்கும் விடுதியில் தங்கினர்.
இதில் சிலர் அங்குள்ள பாரில் மது அருந்தியுள்ளனர். பின்னர் அவர்கள் தங்கள் அறைகளுக்கு சென்று உறங்கியுள்ளனர். இன்று காலை நவீன் (வயது 38) த/பெ முரளிதரன் என்பவர், தனது அறையில் மூக்கில் இரத்தம் வழிந்தபடி கிடந்துள்ளார்.
பின்னர் அவரது நண்பர்கள் நவீனை ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இது குறித்து ஏற்காடு காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த ஏற்காடு காவல் ஆய்வாளர் குமரன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ஹரிகரன் ஆகியோர், நவீன் உடலை பிரேதப்பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த மரணம் குறித்து உடனிருந்தவர்களிடமும், தங்கும் விடுதி ஊழியர்கள் மற்றும் அதன் நிர்வாகத்தினரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்துபோன நவீனுக்கு மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளதாக தெரியவந்துள்ளது.
-நவீன் குமார்.