தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை:மத்திய பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கருத்து!

CMJJtncmtncm2tncm3tncm4tncm5

தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்று மத்திய பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேளாண்மை மற்றும் ஊரக வருமானத்துக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது பட்ஜெட்டின் முக்கிய அம்சம் ஆகும். ஐந்தாண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சொட்டுநீர் பாசனம் மற்றும் நுண்பாசனத்துக்கு ஊக்கம் அளித்திருப்பது, நீர் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான வரவேற்கத்தக்க நடவடிக்கை. உணவு, உரம் போன்றவற்றுக்கு பயனாளிகளின் வங்கிக்கணக்கு நேரடியாக மானியம் வழங்கும் முறையை தொடர்ந்து நான் எதிர்த்து வந்துள்ளேன்.

தேசிய ஊரக டிஜிட்டல் எழுத்தறிவு திட்டம், தமிழகத்தில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் விலையில்லா மடிக்கணினி திட்டத்தைப் போலுள்ளது. மேலும், விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டத்தைப் போன்றே அமைந்துள்ள 5 கோடி ஏழை குடும்பங்களின் வீட்டு பணிச்சுமையை குறைக்கும் வகையில் சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன். புதிதாக 3 ஆயிரம் மருந்துக்கடைகளை தொடங்கும் வகையிலான திட்டம், ஏற்கெனவே எனது அரசால் தொடங்கப்பட்டுள்ள அம்மா மருந்தக திட்டத்தைப் போன்றதாகும்.

மருத்துவ உதவி தேவைப்படும் ஏழைகளுக்கு காப்பீட்டு வசதி வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. இந்தத் திட்டமும், நான் ஏற்கெனவே 2011-ம் ஆண்டு தொடங்கிவைத்த முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தைப் போன்றே அமைந்துள்ளது. தமிழக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் மத்திய அரசின் புதிய திட்டத்தையும் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்வி, திறன்மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட துறைகளில் புதிய திட்டங்களை செயல்படுத்தும்போது மாநில அரசுகளையும் மத்திய அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும்.

மோட்டார் வாகன சட்டத்திருத்தம் மூலம் சாலை போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் திட்டம் கவலையளிக்கிறது. இதுபோன்று நாடாளுமன்றத்தின் மூலம் மாநில அரசுகளின் அதிகாரங்களில் தலையிடுவதை தொடர்ந்து நாங்கள் எதிர்த்து வருகிறோம். அன்னிய நேரடி முதலீட்டைப் பொருத்தவரையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களை சந்தைப்படுத்துவதில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி, சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு வழிவகுப்பதாக தோன்றுகிறது. இதையும் நான் தொடர்ந்து எதிர்த்து வருகிறேன்.

மாநில அரசுகளுடன் பகிர்ந்துகொள்ளப்படாத வரிகளின் மீது வரி மற்றும் மேல்வரி விதிப்பது தவிர்க்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது.

வரிவிதிப்பு நடைமுறைகளை மாநில அரசுடன் மத்திய அரசு பகிர்ந்துகொள்ளாதது விரும்பத்தக்கது அல்ல. மாநிலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரையும் மகிழ்விக்கிற எந்தவிதமான திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் இல்லாததால் இந்த பட்ஜெட் எந்தவித தனிச்சிறப்பையும் பெற்றிருக்கவில்லை.

முந்தைய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களின் செயல்பாடுகள் எடுத்துரைக்கப்படவில்லை. மத்திய பட்ஜெட் குறித்து தமிழக மக்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தனர். ஆனால், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய பட்ஜெட் நிறைவேற்றவில்லை.

இவ்வாறு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்.

 -டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com