சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். கூட்டணிக்காக யாருடனும் பேரம் பேசவில்லை எனவும் நடிகர் விஜயகாந்த் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் தே.மு.தி.க சார்பில் மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் விஜயகாந்த், வரும் தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என கூறினார். மேலும், கூட்டணிக்கு அழைத்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தே.மு.தி.க. சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டணி குறித்த எவ்வித குழப்பமும் இல்லை, தெளிவாகவே தே.மு.தி.க. உள்ளது. கட்சியை நடத்தி செல்வது குறித்த பாடம் கற்பிக்க வேண்டாம் எனவும், பத்திரிகையாளர்களும், ஊடக உரிமையாளர்களும் பெட்டி பெட்டியாக பணம் வாங்கிக் கொண்டு செய்திகளை வெளியிடுவதாகவும், நடிகர் விஜயகாந்த் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இந்த அறிவி்ப்பின் மூலம் தே.மு.தி.க. குறித்து நிலவி வந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது.
-ஆர்.மார்ஷல்.