பெட்ரோல்-டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எண்ணெய் நிறுவனங்கள் 17.03.2016 முதல் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் 6 காசு என்ற அளவிலும், டீசல் விலையை 1 ரூபாய் 96 காசு என்ற அளவிலும் உயர்த்தி உள்ளன. தற்போது உலக சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு நிலவும் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவையே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு காரணம் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடிக்கும் விலை நிர்ணயக் கொள்கை தவறானது என நான் பல முறை சுட்டிக் காட்டியுள்ளேன். எண்ணெய் நிறுவனங்கள் பெரும்பாலும் கச்சா எண்ணெயைத் தான் இறக்குமதி செய்து தங்களது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் அவற்றை சுத்திகரித்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் பொருட்களை விற்பனை செய்கின்றன. மேலும், இந்தியாவிலேயே எடுக்கப்படும் கச்சா எண்ணெயை சுத்திகரித்தும் பெட்ரோலியப் பொருட்களை தயாரிக்கின்றனர்.
அவ்வாறுள்ள சூழ்நிலையில் உலக சந்தையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு நிலவும் விலையினை அடிப்படையாக வைத்து அவற்றை இறக்குமதி செய்தால் நிர்ணயிக்கப்பட வேண்டிய விலையின் அடிப்படையில் உள்ளுர் விலையை நிர்ணயிப்பது சரியான விலை நிர்ணயம் ஆகாது. இது போன்ற தவறான விலை நிர்ணயக் கொள்கையால் தான் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் டீசலையே எரிபொருளாகக் கொண்டு இயக்கப்படுகின்றன. டீசல் விலை உயர்வினால் சரக்கு கட்டணங்கள் அதிகரிக்கும். இதன் காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். அது போன்றே பெட்ரோல் விலை உயர்வால் இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்தும் நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.
தற்போது எண்ணெய் நிறுவனங்களால் மாற்றி அமைக்கப்பட்ட விலைக்கு முந்தைய விலை நிலவரப்படி, பெட்ரோலுக்கு 102.92 சதவீதம், டீசலுக்கு 85.20 சதவீதம் என்ற அளவில் மத்திய கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. மதுபானம், சிகரெட் போன்ற தீங்கான பொருட்களுக்கு தான் அதிகமான கலால் வரி விதிக்கப்படும். ஆனால், பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு இது போன்ற உயர் அளவான கலால் வரி விதிக்கப்படுவது நியாயமானதல்ல.
மத்திய அரசு கடந்த நவம்பர் 2014 முதல் இது வரை பெட்ரோலுக்கு 11 ரூபாய் 77 காசு மற்றும் டீசலுக்கு 13 ரூபாய் 57 காசு என்ற அளவிலும் கலால் வரியை உயர்த்தியுள்ள நிலையில் தற்போதைய விலை உயர்வு சரியானதல்ல. மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு என்பது உலக பொருளாதாரத்தில் நிலவும் பல்வேறு சூழ்நிலைகளைக் கொண்டே அமைவதாகும். சீன நாட்டின் அந்நிய செலாவணி மதிப்பு குறைவு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவது, இந்திய பங்கு சந்தை மற்றும் கடன் சந்தைகளில் முதலீடு செய்யும் அந்நிய நிதி நிறுவனங்கள் தாங்கள் செய்துள்ள முதலீடுகளை திரும்பப் பெறுவது, பெரும் தனியார் நிறுவனங்கள் பிற நாடுகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவது என பல்வேறு காரணிகளும் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தும்.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். ஏழை எளிய நடுத்தர மக்களின் மாதாந்தர செலவு உயரும். இதன் காரணமாக ஏழை எளிய நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படையும்.
எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்.
-ஆர்.அருண்கேசவன்.