பெங்களூரைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகள் நடத்தி வந்தார். கடந்த 2003–ம் ஆண்டு ‘கிங்பிஷர் ஏர்லைன்ஸ்’ என்ற பெயரில் மும்பையில் விமான நிறுவனம் தொடங்கினார். 2005–ல் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது.
முதலில் உள்நாட்டு விமான போக்குவரத்தும் தொடர்ந்து வெளிநாட்டு விமான போக்குவரத்திலும் கிங்பிஷர் ஈடுபட்டது. இதன் தலைமை அலுவலகம் கிழக்கு மும்பை அந்தேரியில் விலேபார்லே என்ற இடத்தில் செயல்பட்டு வந்தது. 2,400 ச.மீ. பரப்பளவில் பல மாடிகளில் பிரமாண்ட அலுவலகமாக செயல்பட்டு வந்தது.
புதிதாக ஏர்பஸ் விமானங்கள் வாங்கி விமான போக்குவரத்து நடத்தியதில் ‘கிங்பிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. விமானிகளுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்கக் கூட முடியாமல் திணறினார். இதனால் விமானிகளும், ஊழியர்களும் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் தொடங்கப்பட்ட 7 ஆண்டுகளில், அதாவது 2012–ல் கிங்பிஷர் நிறுவனம் விமான போக்குவரத்தை நிறுத்தி அலுவலகத்தையும் மூடிவிட்டது.
‘கிங்பிஷர்’ ஏர்லைன்ஸ்’ நிறுவனம் தொடங்க ஸ்டேட் வங்கி உள்பட பல வங்கிகளில் ரூ.6,000 கோடிக்கு விஜய் மல்லையா கடன் வாங்கி இருந்தார். இந்த கடனை அவர் திருப்பி செலுத்தவில்லை. இதையடுத்து விஜய் மல்லையா மீது வங்கிகள் நடவடிக்கையில் இறங்கின. அவருக்கு எதிராக கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.
விஜய் மல்லையாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. அவரது நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட விமான போக்குவரத்து லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.
அனைத்து வங்கிகளிலும் ரூ.6,000 கோடி அளவுக்கு கடன் திருப்பி செலுத்தாததால் அவர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்தது. கடனை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டவர் என்று அனைத்து விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், விஜய் மல்லையா வெளிநாடு செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும், அவரது பாஸ்போர்ட்டை முடக்க கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டேட் வங்கி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது விஜய் மல்லையா முன்கூட்டியே விமானத்தில் லண்டனுக்கு சென்றுவிட்டார் என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அவரை தப்ப விட்டு விட்டதாக சி.பி.ஐ. மீது குற்றம் சாட்டப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வங்கி கடன் மோசடிக்காக விஜய் மல்லையாவின் மும்பை கிங்பிஷர் பங்களா இன்று (17.03.2016) ஏலம் விடப்பட்டது. ஆனால் பங்களாவை வாங்க யாரும் முன்வராததால் ஏலம் தொடங்கப்படாமலே முடிவுக்கு வந்தது.
கடன் பாக்கிக்காக விஜய் மல்லையாவின் மும்பை கிங்பிஷர் அலுவலகம் அமைந்துள்ள பங்களாவை ஏலம் விடுவதாக ஸ்டேட் வங்கி அறிவித்தது. ஸ்டேட் வங்கியில் மட்டும் விஜய் மல்லையாவுக்கு ரூ.1,600 கோடி கடன் உள்ளது.
சொத்துக்களை ஏலம் விட்டு கடனை சரிக்கட்டுவதற்காக ஏல நடவடிக்கையில் ஈடுபட்டது. மும்பை பங்களாவின் ஆரம்ப விலை ரூ.150 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு ஏலம் கேட்பவர்கள் ரூ.15 லட்சம் முன்தொகை செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இன்று மதியம் இணையதளம் மூலம் ஏலம் தொடங்கப்பட்டது. ஆனால் யாரும் ரூ.15 லட்சம் முன் தொகை செலுத்தி ஏலம் கேட்க முன்வராததால் விஜய் மல்லையாவின் மும்பை பங்களாவை விற்பனை செய்ய முடியவில்லை.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com