தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெற இருப்பதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் வேகமாக நடைபெற்று வந்தது.
சட்டமேதை அம்பேத்கார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரது சிலைகளை கிழிந்த அழுக்கு துணிகளை பயன்படுத்தி மூடி வந்தனர். சில பகுதிகளில் சாக்கு பைமூலம் சிலைகளை மறைத்ததுடன் கழுத்தில் கயிறு மூலம் கட்டி வைத்திருந்தனர்.
சேலத்தில் இன்னும் அதிக பட்சமாக திருவள்ளுவர் சிலையையும் மூடினர். இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையொட்டி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதில் மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைகள், தமிழறிஞர்கள் சிலைகளை மறைக்க தேவையில்லை. தேர்தல் அலுவலர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக எங்களை அணுகி விளக்கம் கேட்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
-கே.பி.சுகுமார்.