மு.க.ஸ்டாலின் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மு.க.அழகிரி தி.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு தி.மு.க. பற்றியும், மு.க.ஸ்டாலின் பற்றியும் மு.க.அழகிரி கடுமையாக தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்.
அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க முயற்சி நடந்தது. ஆனால் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மு.க.அழகிரியை சந்திக்க மறுத்து வந்தார்.
இந்நிலையில் நடைபெற இருக்கும் சட்ட மன்ற தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த்தை எப்படியாவது தி.மு.க. கூட்டணிக்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் என்பதில் மு.கருணாநிதி குறியாகவே இருந்தார். அதற்காக பல்வேறு வழிகளில் முயற்சித்தும் பார்த்தார். ஆனால், பலன் கிடைக்கவில்லை.
நடிகர் விஜயகாந்த்துடன், தி.மு.க. கூட்டணி பேசியது மு.க.அழகிரிக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் உன்னிப்பாக கவனித்து வந்தார்.
இந்நிலையில் தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக நேற்று (23.03.2016) அறிவிக்கப்பட்டார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த மு.க.அழகிரி, இன்று (24.03.2016) காலை 11 மணிக்கு சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியை சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பு அழகிரி ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரையில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படையாக கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் எரிச்சலடைந்து உள்ளனர்.
-கே.பி.சுகுமார்.