மே 16–ந் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. 227 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொது செயலாளருமான ஜெ.ஜெயலலிதா கடந்த 4–ந் தேதி அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். ஜெ.ஜெயலலிதா சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அன்றே தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயண அறிவிப்பையும் ஜெ.ஜெயலலிதா வெளியிட்டார். அதன்படி, அவர் சென்னையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
சென்னை தீவுத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாலை 6.05 மணிக்கு போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா காரில் புறப்பட்டார். வழி நெடுக கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு வாக்கு கேட்டபடியே தீவுத்திடல் நோக்கி வந்தார்.
சரியாக மாலை 6.25 மணிக்கு மேடைக்கு வந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தொண்டர்களை பார்த்து இரட்டை விரலை காட்டியபடி கையசைத்தார். பதிலுக்கு, தொண்டர்களும் இரட்டை விரலை காட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
மேடைக்கு முன்பு, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 20 தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் கழுத்தில் கட்சி துண்டு அணிந்தபடி வரிசையாக கைகூப்பியபடி நின்றனர். அவர்களை முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்து பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
இப்பொழுது எங்கே பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் மதுவிலக்கை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் பூரண மதுவிலக்கை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் மதுவிலக்கு கொண்டு வருவது பற்றி இன்று பல அரசியல் கட்சி தலைவர்களும் பேசி வருகின்றனர். மதுவைப் பற்றி அறியாத ஒரு தலைமுறைக்கு, மதுவை அறிமுகப்படுத்திய தி.மு.க. தலைவர் கருணாநிதியும், தி.மு.க.வினரும் இது பற்றி பேசுவது விநோதமானது. சாத்தான் வேதம் ஓதுகிறது என்று இதைத் தான் சொல்லுவார்களோ?. மதுவிலக்கை பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் கருணாநிதி பேசக்கூடாது. தி.மு.க.வினர் பேசக்கூடாது.
வரலாறு மக்களுக்கு தெரியாது என்று கருணாநிதி நினைக்கிறாரா? நடந்த பழைய வரலாறுகள் எல்லாம் மக்களுக்கு மறந்துவிட்டன. எல்லோரும் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறார்களா? கேளுங்கள்.
1937–ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டு அதன் பின்னர் படிப்படியாக இது விரிவுபடுத்தப்பட்டது. 1948–ம் ஆண்டு காந்தியடிகள் பிறந்தநாளில் இருந்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் 1971–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அன்றைய முதலமைச்சர் கருணாநிதியால் மதுவிலக்கு நீக்கப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது வகைகள், சாராயம் மற்றும் கள் விற்பனைக்கான கடைகள் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டன. மதுவிலக்கை நீக்கி குடியின் பழக்கத்திற்கு தமிழக மக்களை கருணாநிதி ஆட்படுத்த முற்பட்ட போதே, ராஜாஜி கொட்டும் மழையில் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து காலில் விழுந்து இறைஞ்சும் வகையில் கெஞ்சிய போதும் அதை உதாசீனப்படுத்தி மதுவை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தவர் கருணாநிதி.
அன்றைய தினம் கருணாநிதி என்ன சொன்னார்?. ‘‘ராஜகோபாலாச்சாரியார் கள்ளுக் கடையைத் திறந்தால் மனைவியை அடிக்கும் குற்றம் பெருகும் என்கிறார். குடிக்காதவன் மட்டும் மனைவியை அடிக்காமலா இருக்கிறான்? பெருவாரியான குடியர்கள் மனைவியை அடிப்பதில்லை. மட்டோடு தான் குடிக்கிறார்கள்’’ என்று பேராசிரியர் ரத்தினசாமி எம்.பி. அப்போது எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி, கள்ளுக் கடையை திறக்கும் கொடிய முடிவுக்கு நியாயம் கற்பித்தார் கருணாநிதி. அவரும், தி.மு.க.வினரும் தான் இன்றைக்கு தாங்கள் மதுவிலக்கை அமல்படுத்தப்போவதாக கூறிக்கொள்கின்றனர்.
மதுவிலக்கு ரத்தை நியாயப்படுத்தும் விதமாக கருணாநிதி சட்டமன்றப் பேரவையில் பூரண மதுவிலக்கோ அல்லது பகுதி மதுவிலக்கோ அமலாகும் ராஜ்யங்களிலே கூட அது முழு வெற்றியடைந்து விட்டதாகச் சொல்ல முடியாது.
உதாரணமாக, பூரண மதுவிலக்கு நடைமுறையில் இருக்கும் தமிழகத்தில் மது இறக்குவதும், விற்பதும் சட்டப்படி தடைப்படுத்தப்பட்ட காரியங்கள். ஆனாலும், ஆங்காங்கே பரவலான குடிசைத் தொழிலாக அது அமோகமாக நடைபெற்று வருவதைச் சட்டம் கண்களை மூடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்த விஷயம்’’ என்று 1971–ம் ஆண்டு ஜூன் மாதம் சட்டமன்றப் பேரவையில் பேசியுள்ளார். இப்படிப்பட்ட கருணாநிதி தான் இன்றைக்கு மதுவிலக்கை பற்றி பேசி வாக்குகள் பெற இயலுமா என்று முயற்சிக்கிறார்.
மதுவிலக்கிற்கு எதிராக பல்வேறு சந்தர்ப்பங்களில் கருணாநிதி பேசியதோடு மட்டுமல்லாமல், அவரது நடவடிக்கைகளும் அவ்வாறு தான் இருந்துள்ளன. 2007–ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டுமென பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பேசியபோது, கருணாநிதி ‘‘நான் அவர்களுக்கெல்லாம் சொல்வது கள்ளச்சாராயம் என்பது ஒழிக்க முடியாத ஒன்று என்பது தான்… அறவே கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாததற்கு காரணம் மதுவிலக்கு திட்டத்தில் நாம் மற்ற நாடுகளோடு போட்டி போடுவது என்றால் அவர்களை விட இன்னும் நல்ல சரக்குகளை இங்கே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதிலே தான் வெற்றி பெற முடியுமே தவிர, வேறு வழியிலே வெற்றி பெற முடியாது என்பதற்கு இன்றைய உலக நிலை, உலகப் பண்பாடு, உலகக் கலாசாரம் சாட்சியாக இருக்கின்றது’’ என்று சட்டமன்றத்தில் பேசினார், கருணாநிதி.
மதுவிலக்கு குறித்து இது தான் கருணாநிதியின் உண்மையான கருத்து.
மதுவிலக்கை பொறுத்தவரை எனது நெஞ்சார்ந்த குறிக்கோள் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான். 1971–ம் ஆண்டு மதுவிலக்கு நீக்கப்பட்ட பின் மதுவிலக்கு கொள்கை பல்வேறு மாற்றங்களை அடைந்தது. 1990–ம் ஆண்டு அன்றைய தி.மு.க. அரசால் நாட்டு மதுவை தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல் கொண்டுவரப்பட்டது. ஆனால் 1991–ம் ஆண்டு நான் ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழக மக்களுக்கு அதிலும் குறிப்பாக தாய்மார்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நான் கையெழுத்திட்ட முதல் கோப்பே இந்த மலிவு விலை மதுவை ஒழிக்கின்ற கோப்பு தான். அன்றைக்கு 400 கோடி ரூபாய் இழப்பை ஏற்றுக்கொண்டு இந்த முடிவை நான் எடுத்தேன்.
மதுவிலக்கு பற்றி தீவிரமாக ஆராய்ந்து தான் முடிவெடுக்க முடியும் என்பதால் இதுபற்றி நான் இதுவரை பேசாமல் இருந்தேன். அவ்வாறு நான் அறிவித்துவிட்டால் அதனை எப்படியும் நிறைவேற்றுவேன் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்பதால் தான் கருணாநிதி இதுகுறித்து தனது அச்சத்தை வெளியிட்டுள்ளார்.
உண்மையிலேயே மதுவிலக்கின் மேல் அவருக்கு ஆர்வம் இருக்குமேயானால், அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்தால் அதை நம்ப இயலாது என ஏன் கூறுகிறார்?. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பின்னர் மதுவிலக்கை கொண்டு வர வற்புறுத்தி சேலத்தில் தி.மு.க.வினர் ஏன் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்?. தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தி.மு.க. இந்த தேர்தலில் ஜெயிக்கப்போவதில்லை என்பது நன்றாக தெரியும். எனவே தான், அரசியல் காரணங்களுக்காக மதுவிலக்கைப் பற்றி பேசி வருகிறார். எனவே தான் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கைப் பற்றி குறிப்பிட்டால் அதை மக்கள் நம்ப கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எந்த ஒரு செயலையும் ஆராய்ந்து, எந்த ஒரு உறுதிமொழியையும் செயல்படுத்த முடியுமா என்று நன்கு சிந்தித்த பின்னரே அத்தகைய உறுதிமொழியை இந்த ஜெயலலிதா வழங்குவார் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். எனவே தான் அதுபோன்ற உறுதிமொழிக்கு அஞ்சி நடுங்கி முன்ஜாமீன் கோருவது போல கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
2005–06–ம் நிதியாண்டில் அதாவது, எனது தலைமையிலான முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் இறுதி ஆண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் 2 கோடியே 29 லட்சத்து 22 ஆயிரம் பெட்டிகள் விற்பனை ஆயின. 2010–2011–ம் ஆண்டு அதாவது, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் இறுதியில் இது 4 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் பெட்டிகள் என உயர்ந்தது. அதாவது இரு மடங்குக்கும் அதிகமாக, அதாவது 109 சதவீதம் அளவிற்கு தி.மு.க. ஆட்சி காலத்தில் விற்பனை உயர்ந்தது.
அதே போன்று பீர் விற்பனையை எடுத்துக்கொண்டால் 1 கோடியே 32 லட்சத்து 27 ஆயிரம் பெட்டிகள் என 2005–2006–ம் ஆண்டில் இருந்தது. 2010–11–ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் 2 கோடியே 86 லட்சத்து 24 ஆயிரம் பெட்டிகள் என இரு மடங்குக்கு மேல் உயர்ந்தது. இந்த ஆண்டில், அதாவது அ.தி.மு.க. ஆட்சியில் இது, 2 கோடியே 31 லட்சத்து 89 ஆயிரம் பெட்டிகள் என குறைந்துள்ளது. மக்களை அதிகம் குடிக்க வைத்தது தி.மு.க. தான் என்பதை இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
பூரண மதுவிலக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பது தான் எப்பொழுதும் நான் கொண்டுள்ள கொள்கை ஆகும். ஆனால் பூரண மதுவிலக்கை ஒரே கையெழுத்தில் கொண்டு வருவது என்பது இயலாது. இது படிப்படியாகத்தான் கொண்டு வர முடியும். 1971–ம் ஆண்டில் தி.மு.க.வால் மது அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு தலைமுறைக்கும் மேலாக இது தமிழ்நாட்டில் உள்ளது.
எனவே தான் இதை ஒரே நாளில் ஒழிக்க இயலாது. எனது தலைமையிலான அ.தி.மு.க. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும்.
முதலில் சில்லறை மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் சில்லறை மதுபான கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் லட்சியத்தை நாம் அடைவோம். ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்ற தாரக மந்திரத்தை கடைபிடித்தே நான் பணியாற்றி வருகிறேன்.
உண்மை எப்படி நம்பிக்கையை கொடுக்கிறதோ, உழைப்பு எப்படி வசதியைக் கொடுக்கிறதோ, திறமை எப்படி வெற்றியைக் கொடுக்கிறதோ, அதுபோல எனது ஆட்சி உங்களுக்கு வசந்தத்தைக் கொடுத்து இருக்கிறது. இந்த வசந்தம் தொடர்ந்திட, ஏழைகள் தொடர்ந்து ஏற்றம் பெற, தமிழகம் அமைதிப் பூங்காவாய் தொடர்ந்திட, மின் வெட்டே இல்லை என்ற நிலை நிலைத்திட, பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சி அடைந்திட, தொழில்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைய, தொழிலாளர் நலன் பெருக, விவசாயம் விருத்தி அடைய, சேவைத் துறை மேலும் செழித்திட, தமிழகம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் சென்றிட, தமிழகத்தின் உரிமைகள் தொடர்ந்து நிலைநாட்டப்பட, தற்போதுள்ள நலத்திட்டங்கள் நீடித்திட, அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் தமிழகம் தொடர்ந்து பீடுநடை போட, வருகின்ற 16–5–2016 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் ‘‘இரட்டை இலை’’ சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜெ.ஜெயலலிதா கூறினார்.
-ஆர்.அருண்கேசவன்.