நக்கீரன் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் “இனிய உதயம்” பத்திரிக்கையின் இணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் இனிய உதயம் இதழில் 1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற கதையை எழுதியிருந்தார்.
தனது ‘ஜூகிபா’ கதையை அப்படியே திருடி, ஸ்கிரீன் பிளே செய்து, சினிமா சமாச்சாரங்களான பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள், கிராபிக்ஸ் உத்திகள் போன்றவற்றை சேர்த்து ‘எந்திரன்’ படத்தை டைரக்டர் சங்கர் இயக்கியிருக்கிறார்.
இந்தக் திருட்டுக்கதை தயாரிப்பாளராக இருந்து படமாக வெளியிட்டிருக்கிறார் கலாநிதி மாறன், என்றெல்லாம் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததோடு ‘எந்திரன்’ படக்கதையை தனது கதை என்று அறிவிக்க வேண்டும் என்றும், இதற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
மேலும், டைரக்டர் சங்கரும், தயாரிப்பாளர் தயாநிதிமாறனும் மோசடியாக கதையைத் திருடி கூட்டுச் சதி புரிந்து சுயலாபம் பார்க்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மீது பதிப்புரிமை சட்டப்படியும், மோசடிக் குற்றத்தின் அடிப்படையிலும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அப்போது சென்னை காவல்துறை ஆணையராக இருந்த ராஜேந்திரனிடம் புகாரும் கொடுத்திருந்தார்.
அப்போது (2010) திமுக ஆட்சி நடந்ததால் திகைத்துப்போன போலீஸ் அதிகாரிகள், புகாரில் இருந்து கலாநிதிமாறனின் பெயரை நீக்கினால்தான் புகாரை பதிவு செய்ய முடியும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து எழும்பூர் சிறப்பு மெட்ரோ பாலிடன் கோர்ட்டில் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து கலாநிதி மாறனுக்கும், டைரக்டர் சங்கருக்கும் கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இதில் அதிர்ந்துப்போன கலாநிதி மாறனும், சங்கரும் இந்த வழக்கை விசாரிக்க கூடாது என, சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கினர்.
இந்த நிலையில் 15.07.2011 அன்று எழும்பூர் கோர்ட்டில் ‘எந்திரன்’ கதைத் திருட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கலாநிதிமாறன் மற்றும் சங்கரின் வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்றம் கொடுத்த இடைக்காலத் தடையைக் காட்டியதோடு, இது விசாரிக்க உகந்த வழக்கல்ல. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.
அப்பீல் மூலம் இடைக்காலத் தடையை நீக்கும் முயற்சியில் இருப்பதாக தமிழ்நாடன் தரப்பில் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கலாநிதி மாறன் மற்றும் சங்கரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் சன் பிச்சர்ஸ் தோன்றாத் தரப்பினராக அறிவித்து 29.10.2015 அன்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. இதையடுத்து ஆரூர் தமிழ்நாடான் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது பிரமான வாக்குமூலத்தையும், ஆவணங்களையும் சமர்பித்தார்.
தற்போது தம்மை தோன்றாத் தரப்பினராக அறிவித்ததை நீக்கி உத்தரவு செய்யும்படி கலாநிதி மாறன் மற்றும் சன்பிச்சர்ஸ் மனு செய்திருந்தனர். இந்த மனு இன்று (21.04.2016) சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
சுமார் 5 வருடங்களுக்கு மேலாக பதிலுரை தாக்கல் செய்யாமல் நீதிமன்றத்தை ஏமாற்றி வந்தததைக் கண்டித்து ‘சன் பிச்சர்ஸ்’ நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி எம்.சத்தியநாராயணா உத்தரவிட்டார்.
இந்த தொகையை 08.06.2016-க்குள் மானாமதுரை தொழு நோயாளிகள் மருத்துவமனைக்கு ‘சன் பிச்சர்ஸ்’ நிறுவனம் செலுத்த வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளார்.
இவ்வழக்கில் ஆருர் தமிழ்நாடான் சார்பாக, வழக்கறிஞர்கள் பி.டி.பெருமாள். எல்.சிவக்குமார் ஆகியோர் ஆஜரானார்கள்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com