அரியானாவை சேர்ந்தவர் மொஹீந்தர் சிங் கில் (வயது 79). இவரது மனைவி தல்ஜீந்தர் கவுர் (வயது 70) இவர்களுக்கு திருமணம் ஆகி 46 வருடங்களாக குழந்தை இல்லை. குழந்தை இல்லாத இந்த தம்பதி சமூகத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர். குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையை அவர்கள் இழந்து விட்டனர்.
இந்த நிலையில், விளம்பரம் ஒன்றில் இருந்து செயற்கை முறையில் கருத்தரித்தல் (ஐ.வி.எப்.) வழியே குழந்தை பெற முடியும் என்பதை அறிந்து அதற்கான முயற்சியில் தம்பதியினர் இறங்கினர். அதன் பின் கருவுற்ற கவுர் கடந்த மாதம் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
தனது வாழ்க்கை முழுமை அடைந்து விட்டது என கூறும் கவுர், எங்களது வேண்டுதல்களை இறைவன் கேட்டுள்ளார். என்னுடைய பராமரிப்பிலேயே குழந்தையை நான் கவனித்து வருகிறேன். அதிக சக்தி கிடைத்த உணர்வில் இருக்கிறேன். எனது கணவரும் குழந்தையை அவரால் முடிந்தவரை கவனித்து வருகிறார்.
செயற்கை கருத்தரித்தல் குறித்த விளம்பரத்தை கவனித்த நாங்கள், ஒரு முயற்சி செய்திடலாம் என கருதினோம். எனக்கென ஒரு குழந்தை வேண்டும் என நான் அதிகம் விரும்பினேன் என கூறியுள்ளார். அந்த தம்பதியின் சொந்த கருமுட்டை மற்றும் விந்தணு வழியே குழந்தை பிறந்துள்ளது. அது ஆரோக்கியமுடன், 2 கிலோ எடை கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் 19-ந்தேதி பிறந்த அந்த குழந்தைக்கு அர்மான் என பெயர் சூட்டியுள்ளனர்.
செயற்கை கருத்தரித்தல் மைய நிர்வாகி அனுராக் பிஷ்னோய் கூறும்பொழுது, கவுர் பலவீன நிலையில் இருந்ததை அடுத்து அவர்களை முதலில் தவிர்க்க முயற்சித்தேன். ஆனால் அனைத்து பரிசோதனைகளிலும் முடிவுகள் சரியாக இருந்தன. அதனால் இந்த முயற்சியில் நாங்கள் இறங்கினோம் என கூறினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.