ஏற்காட்டில் எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் நேற்று ஜமாபந்தி நடத்தப்பட்டதால் 23 மனுக்கள் மட்டும் பெறப்பட்டது.
ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்காடு, முளுவி, பட்டிப்பாடி கிராம தரப்பு மக்களுக்கு நேற்று ஜமாபந்தி துவங்கியது. இந்த ஜமாபந்தியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூர்த்தி கலந்துகொண்டு மனுக்கள் பெற்றார்.
இந்த முகாம் குறித்து பொதுமக்களுக்கு எவ்வித முன் அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை. இதனால் முகாமில் பொதுமக்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே கலந்துக்கொண்டனர். இம்முகாமில் 23 மனுக்கள் மட்டுமே பொதுமக்கள் வழங்கினர்.
முகாமில் ஏற்காடு டவுண் பகுதியை சேர்ந்த அர்ச்சுணன் என்பவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஊழியர் இல்லாதவர்களை பணியமர்த்தி அரசு வேலைகளில் ஈடுபடுத்துவது, மேலும், ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.குப்புசாமி என்பவர் மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே இடைதரகர்களாக செயல்படுவதாகவும் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூர்த்தி விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இந்த ஜமாபந்தியில் ஏற்காடு வட்டாட்சியர் மணிவண்ணன், ஆதிதிராவிடர் நல துறை தனி வட்டசியர் தேன்மொழி, சமூகபாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் லெனின், ஏற்காடு வருவாய் ஆய்வாளர் கணேசன், கிராமநிர்வாக அலுவலர் பாஸ்கர் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். நேற்று துவங்கிய ஜமாபந்தி வரும் 2-ம் தேதி வரை நடக்கவுள்ளது. மொத்தம் ஒன்பது பஞ்சாயத்துக்கு தினம் மூன்று பஞ்சாயத்துவீதம் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.
-நவீன் குமார்.