வாதப் பீனிசக் குறிகள் :
கண்களில் பீளை வரும். கை கால்களில் கடுப்பதைப் போன்ற வலி ஏற்படும். புகைச்சல் எடுக்கும். இருமல், மேல் மூச்சு, நெஞ்சில் வலி, மூக்கில் நீர் ஒழுகுதல் முதலான குறிகள் ஏற்பட்டால் அது வாத பீனிசம் ஆகும்.
பித்தப் பீனிசக் குறிகள் :
இருமலுடன் கோழை அதிகமாகும். குளிர்காற்று பட்டால் நெஞ்சில் கபம் கட்டிக் கொள்ளும். இருமல், மேல் மூச்சு, இரைப்பு இவைகள் உண்டாகும். வயிறு பொறுமலும், ஏப்பம் விட்டால் மாமிச வாடையும் வீசும். பிடரி கணக்கும். மூக்கிலிருந்து சதா நீர் வடிந்து கொண்டே இருக்கும். இந்த அறிகுறிகள் பித்த பீனிசக் குறிகளாகும்.
சிலேத்மப் பீனிசக் குறிகள் :
தலை வலி உண்டாகும். மூக்கிலிருந்து சதா சளி போல நீர் ஒழுகி கொண்டே இருக்கும். ஏழு நாட்கள் சென்ற பின் சளி இறுகி கெட்டியாகி விடும். மூக்கிலிருந்து நாற்றம் வீசும். தண்ணீர் தாகம் உண்டாகும். இன்னும் சில நாட்கள் சென்றால் மூக்கடைப்பு ஏற்படும்.
வாதப் பித்தப் பீனிசக் குறிகள் :
முகத்தில் கருப்பு நிற புள்ளிகள் காணும். பற்கள் கூசும். விழியில் சிவப்பு நிறம் காணும். தலை கணக்கும். மூக்கில் இருந்து சிராய் போலும், சீல் போலும் சளிக் கொட்டும். இவை வாத பித்த பீனிசக் குறிகள் ஆகும்.
வாத கப பீனிசக் குறிகள் :
தலை இளைமையிலேயே நரைக்கும். பார்வையும் குறையும். பற்கள் ஆட்டம் காணும். தலை உடம்பு இவை கணக்கும். மூக்கிலிருந்து சதா நீர் ஒழுகும். இவை வாத கப பீனிச குறிகள் ஆகும்.
பித்த சிலேத்ம பீனிசக் குறிகள் :
மூக்கிலிருந்து சிராய் போலும், சீல் போலும் விழும். நாக்கில் கசப்பும், இனிப்பு சுவையும் இருக்கும். காதில் சதா சப்தம் உண்டாகும். தலையில் உணர்ச்சி இருக்காது. தலை கிறு கிறு என்று சுழலும். மண்டையிடியும் உண்டாகும். இவை பித்த சிலேத்ம பீனிசக் குறிகள் ஆகும்.
திரிதோஷ பீனிசக் குறிகள் :
மூச்சுக் காற்று உஷ்ணமாக வெளிப்படும். மூக்கில் பார உணர்ச்சியுடன் அடைப்பும் உண்டாகும். பனித்துளியை போன்று நீர் நாசியிலிருந்து வரும். தலைவலி உண்டாகும். இருமல் ஏற்படும். உடம்பு மிகவும் மெலிவடைந்து சோர்வு உண்டாகும். இவைகள் திரிதோஷப் பீனிசக் குறிகள் ஆகும்.
சல பீனிசக் குறிகள் :
சிறுநீர் வெளியாகாது. சிரசில் தண்ணீர் கோர்த்து நிற்கும். நெஞ்சு வீக்கமாக இருக்கும். சுரம், இருமல் இவைகளுடன் தும்மல் உண்டாகும். மூக்கிலிருந்து நீர் வழ வழ என்று எப்போதும் கசியும். இவை சல பீனிசக் குறிகள் ஆகும்.
இரத்த பீனிசக் குறிகள் :
தலைக்கணக்கும். கண் விழிகள் சிவக்கும். மூக்கில் இருந்து இரத்தம் தினந்தோறும் வெளிவரும். நோயாளி மூக்கினால் முணுகுவான். இவை இரத்த பீனிசக் குறிகள் ஆகும்.
வறட்சி பீனிசக் குறிகள் :
தொண்டை உலர்ந்து போகும். மூக்கில் அரிப்பு ஏற்படும் ஆனால் தும்மல் வராது. மண்டை கணக்கும். வாசனைகளை உணர முடியாது. தலையை சொரிந்தால் வெள்ளை நிறமான பொடி உதிரும். இவை வறட்சி பீனிசக் குறிகள் ஆகும்.