காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரனுக்கு நெருக்கடி கொடுத்து மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்தகிருஷ்ணன் அந்நிறுவனத்தை வாங்க உதவியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து 2011-ல் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவன பங்குகளில் ரூ.650 கோடியை மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்தது.
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு சி.பி.ஐ. இந்த வழக்கில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
மாறன் சகோதரர்கள் தவிர மேலும் 6 பேர் மற்றும் சன் டைரக்ட் டி.வி. பிரைவேட் லிமிடெட் உட்பட 4 நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
இந்தக் குற்றப்பத்திரிகை மீதான விசாரணையின்போது, ஏர்செல் நிறுவனத்தை தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்து விற்பனை செய்ய வைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்று சி.பி.ஐ. தரப்பு வாதிட்டது. இதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
கடந்த 2004-06 காலகட்டத்தில் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்தின் உரிமங்களுக்கான விண்ணப்பங்களை காரணமே இன்றி நிலுவையில் வைத்தார். அதன் உரிமையாளர் சிவசங்கரனுக்கு நெருக்கடி கொடுத்து, அதன் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய வைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. நிறுவனம் கைமாறிய பிறகு உரிமம் வழங்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டது சிவசங்கரன்தான் என்று சி.பி.ஐ. தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு இன்று (11.07.2016) மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜர் ஆனார்கள்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com