புதிய சட்டத்திருத்தத்துக்கு எதிராக வழக்கறிஞர்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக, நீதி மன்ற புறக்கணிப்பில் ஈடுப்பட்டு, பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் மேலும் வலுவடைந்து தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டமாக தற்போது உருவெடுத்து உள்ளது. இது நாள்வரை நீதி மன்ற நடவடிக்கைகளை மட்டுமே பாதித்து வந்த வழக்கறிஞர்கள் போராட்டம். தற்போது பொது மக்களின் சகச வாழ்க்கையையும் பாதிக்கும் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று பார் கவுன்சில் எச்சரித்தும் கூட, வழக்கறிஞர்கள் அதெயெல்லாம் ஒரு பொருட்டாகவே கருத்தில் கொள்ளவில்லை.
மாறாக, பார் கவுன்சில் அலுவலகம் முன்பே ஊர்வலமாக வந்த வழக்கறிஞர்கள், அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா, இணைத்தலைவர் பிரபாகரன், பார் கவுன்சிலின் தலைவர் செல்வம் ஆகியோரை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
தங்கள் பாதுக்காப்பு பணிக்காக மத்திய கம்பெனி படைகள்தான் வேண்டும் என்று அடம் பிடித்து தங்களுக்கு தாங்களே உத்தரவு போட்டுக்கொண்ட நீதிபதிகள், தற்போது வழக்கறிஞர்களின் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, தமிழக காவல்துறையினரின் தயவைதான் நாடவேண்டியுள்ளது. நேற்று (25.07.2016) மட்டும் தமிழக காவல்துறை பாதுக்காப்பு பணியில் அலட்சியம் காட்டியிருந்தால், வழக்கறிஞர்களுக்கும், மத்திய கம்பெனி படையினருக்குமிடையில் மிகப்பெரிய வன்முறை வெடித்திருக்கும்.
அதனால்தான், இது வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் நடக்கும் போராட்டமல்ல! மாறாக வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் இடையில் நடக்கும் உரிமை போராட்டம் என்று வழக்கறிஞர்களே பகிரங்கமாக அறிவித்தார்கள்.
அப்படியானால் புதிய சட்டத்திருத்தத்தில் அப்படி என்னதான் குறிப்பிடப்பட்டுள்ளது? வழக்கறிஞர்களின் கடுமையான போராட்டங்களுக்கு காரணம்தான் என்ன?
இதோ, அரசிதழில் வெளியிடப்பட்ட புதிய சட்டத்திருத்தத்தின் உண்மை நகலை நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்:
Advocates Act, 1961-ன், பிரிவு 34-ன் படி உயர்நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரத்தின் படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
*நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட நீதிபதியே தடைவிதிக்கலாம்.
*நீதிபதிகளின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வழக்கறிஞர்கள் பணியாற்ற தடை விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
*நீதிமன்ற வளாகத்தில் போராட்டம், ஊர்வலம் நடத்தினால் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்படும். நீதிமன்ற ஆவணங்களை திருத்தினாலோ, நீதிபதி பெயருக்கு அவதூறு பரப்பினாலோ வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும்.
*நீதிபதியின் பெயரை பயன்படுத்தி பணம் வாங்கும் செயலில் ஈடுபட்டால், நீதிமன்றத்தில் மதுபானம் அருந்தி சென்றால் தடை விதிக்கப்படும்.
*உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும், மாவட்ட நீதிமன்றங்களைப் பொறுத்தவரை, முதன்மை நீதிபதிக்கு அறிக்கையளித்து நடவடிக்கை எடுக்கலாம்.
இதற்குமுன், தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் வக்கீல்கள் மீது பார் கவுன்சில் மட்டுமே நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், இந்த சட்டத்திருத்தத்தின்படி வழக்கறிஞர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டால் அந்தந்த “நீதிபதியே” வழக்கறிஞர்களின் தொழிலை தடைவிதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் இந்த சட்டத்திருத்தத்தின் முக்கிய அம்சம்.
உலகில் உள்ள அனைத்து மதங்களிலும், அனைத்து இனங்களிலும், அனைத்து துறைகளிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஆக, உலகத்தில் இரண்டு சாதிகள்தான் இருக்கிறது. ஒன்று நன்மை செய்கின்ற சாதி, மற்றொன்று தீமை செய்கின்ற சாதி. அந்த வகையில் பார்க்கும் போது இந்த நியதி வழக்கறிஞர்களுக்கும் பொருந்தும், நீதிபதிகளுக்கும் பொருந்தும்.
அதனால்தான்,
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி- என்று ஒளவை மூதாட்டி நல்வழியில் குறிப்பிட்டுள்ளார்.
சமூக விரோதிகள் அனைத்து துறைகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள், அதற்காக வழக்கறிஞர்களை மட்டுமே குறிவைத்து குற்றப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?
சட்டத்துறையில் கலங்கம் விளைவிக்கும் சில வழக்கறிஞர்களை கண்டிக்கத்தான் இச்சட்டமெனில், நீதித்துறையில் கலங்கம் விளைவிக்கும் நீதிபதிகளை தண்டிப்பதற்கு சட்டம் வேண்டாமா? நீதிபதிகளின் குறைகளையும், குற்றங்களையும் யார் தட்டி கேட்பது?
வழக்கறிஞர்களின் கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமையை பறிப்பதற்காகவே இச்சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் மூலம் தகுதியற்ற நீதிபதிகள் தங்களை மிகச் சுலபமாக தற்காத்துக் கொள்ளவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.
அதனால்தான் இச்சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாங்கள் கடுமையாக போராடி வருகின்றோம் என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.
நீதிபதிகள் ஒன்றும் வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதூதர்கள் இல்லை. இந்த வழக்கறிஞர்கள் சமூகத்தில் இருந்து தேர்வாகி சென்றவர்கள்தானே?
அவர்கள் தவறு செய்தால் யாரும் விமர்சனம் செய்யக் கூடாதா?
சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறேன்.
மது போதையில் இரயிலில் பயணம் செய்த ஒரு நீதிபதி, டிக்கட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது இந்த நீதித்துறை என்ன நடவடிக்கை எடுத்தது? சொந்த ஊருக்கே அவரை பணிமாற்றம் செய்தது அவ்வளவுதான்.
இதோ அதற்கான ஆதாரம்:
சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் என்பது உண்மையானால், அந்த நீதிபதி மீது வழக்கு பதிவு செய்து அல்லவா தண்டித்திருக்க வேண்டும்? அதற்கு எது தடையாக இருந்தது? அவர் வகித்த நீதிபதி பதவிதானே?
நீதிமான்களின் தவறுகள் ஒரு போதும் மன்னிக்கப்படமாட்டாது என்பதை நீதிபதிகள் முதலில் மனதில் கொள்ள வேண்டும்.
மக்களின் பிரச்சனைகளுக்காக வாதாட வேண்டிய வழக்கறிஞர்களும், நீதி வழங்க வேண்டிய நீதிபதிகளும், அவர்களது பிரச்சனைகளை பேச்சுவார்த்தையின் மூலமாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ தீர்க்க முடியாமல் திணறிக்கொண்டிருப்பதைப் பார்த்து, சட்டத்துறையினர் மீதும், நீதித்துறையினர் மீதும் நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்து போய் உள்ளனர்.
இவர்கள் பிரச்சனைகளையே தீர்த்து கொள்ள முடியாதவர்கள், நம்ப பிரச்சனையையா தீர்த்து வைக்க போகிறார்கள்? என்று நாட்டு மக்கள் நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள்.
சம்மந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா?
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com