வழக்கறிஞர்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய சட்ட திருத்த விதிகளை குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர்களின் இந்த போராட்டம் தனக்கு மனவேதனை அளிப்பதாக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். இந்நிலையில், வழக்கறிஞர் காசிராமலிங்கம் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், வழக்கறிஞர்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின்படி, நீதிபதிக்கு எதிராக கை நீட்டி, உரத்த குரலில், நீதிபதியை மிரட்டும் விதமாக வழக்கறிஞர்கள் வாதம் செய்யக்கூடாது. அவ்வாறு வாதம் செய்யும் வழக்கறிஞர்களை, வழக்கறிஞர் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்ய உயர்நீதி மன்றம் மற்றும் மாவட்ட முதன்மை செசன்சு நீதி மன்ற நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளன.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்குள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால், வழக்கு விசாரணையின்போது நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் எவ்வாறு நடந்துகொள்கின்றனர்? என்பதை உறுதி செய்ய முடியும்’ என்று கூறியிருந்தார்.
மேலும், அந்த வழக்கின் இடைக்கால மனுவில், ‘அனைத்து நீதிமன்றங்களிலும் கேமரா பொருத்தும் வரை, வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்திருத்த விதிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் எம்.புருஷோத்தமன் ஆஜராகி வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள், ‘கண்காணிப்பு கேமரா பொருத்துவது என்பது மாநில அரசின் நிதி தொடர்பானது. மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கினால்தான் இந்த பணிகளை மேற்கொள்ள முடியும். ஆனால், கடந்த ஆண்டுகளில், மத்திய அரசு நீதித்துறைக்கு ஒதுக்கிய நிதியை மாநில அரசு பயன்படுத்தவில்லை. அதனால், அந்த நிதி மீண்டும் மத்திய அரசுக்கு போய் விட்டது. எனவே, இந்த திட்டத்தை அமல்படுத்த விரிவான விசாரணை தேவை’ என்று கருத்து தெரிவித்தனர்.
பின்னர் மனுதாரர் வழக்கறிஞர் ‘வழக்கறிஞர்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்த விதிகளை கேமரா பொருத்தும் வரை நிறுத்திவைத்தால், தற்போது எழுந்துள்ள சர்ச்சைக்கு அது முற்றுப்புள்ளி வைக்கும்’ என்றார்.
இதையடுத்து தலைமை நீதிபதி கூறியதாவது:-
புதிய சட்ட திருத்த விதிகளின் மீது வழக்கறிஞர்களுக்கு ஒரு விதமான அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த புதிய விதிகளை மீண்டும் ஆய்வு செய்து, இறுதி முடிவு எடுக்கும் வரை, இந்த புதிய விதிகளின் அடிப்படையில் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று நாங்கள் ஏற்கனவே பல முறை அறிவித்துவிட்டோம். இதற்கு என்ன அர்த்தம்? அந்த புதிய விதியை செயல்படுத்தாமல், நிறுத்திவைப்பதாகத்தானே அர்த்தம். அதை வழக்கறிஞர்கள் புரிந்துகொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். புதிய விதிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை நேரடியாக சொல்லாமல், மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளது.
ஆனால், உண்மையில் போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் நோக்கம் வேறு விதமாக உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் தலைவர்கள் இந்த போராட்டத்தை நடத்தவில்லை. மூன்றாம் நபர்கள் எல்லாம் தலைமை தாங்கி போராட்டத்தை நடத்துகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்கள், தங்களது போராட்டம் தமிழக அரசுக்கும், போலீசாருக்கும் எதிரானது அல்ல என்று அறிவிக்கின்றனர்.
கடந்த 2009-ம் ஆண்டு ஐகோர்ட்டில் போலீசார் நடத்திய தடியடி சம்பவத்துக்கு பின்னர், போலீசார்தான் வழக்கறிஞர்களுக்கு எதிரியாக இருந்தனர். ஆனால், தற்போது அவர்கள் நண்பர்களாகி விட்டனர். தமிழக நீதித்துறைதான் தற்போது வழக்கறிஞர்களுக்கு எதிரியாகிவிட்டது.
அதே நேரம், இதுபோன்ற சூழ்நிலையை வேறு எங்கும் நான் பார்த்தததில்லை. இந்த ஐகோர்ட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், வழக்கறிஞர்கள் தினமும் ஒரு பிரச்சினையை கொண்டு வந்து, கவனத்தை திசை திருப்பி விடுகின்றனர். பொதுமக்களுக்கு பிரச்சினை என்றால், அவர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நிவாரணம் வாங்கிக் கொடுக்கின்றனர். ஆனால், வழக்கறிஞர்களுக்கே பிரச்சினை ஏற்படும்போது, நீதிமன்றத்தை நாடி நிவாரணம் கேட்காதது ஏன்? அதை செய்யாமல், போராட்டத்தில் ஈடுபடுவது ஏன்?
இப்போதும் சொல்கிறேன், வழக்கறிஞர்கள் அனைவரும் போராட்டத்தை கை விட்டு பணிக்கு திரும்பவேண்டும். உங்களது பிரச்சினைக்கு நீதிமன்றத்துக்கு வந்து நிவாரணம் தேடுங்கள். அல்லது 5 நீதிபதிகளின் குழு முன்பாக ஆஜராகி கருத்துக்களை தெரிவியுங்கள்.
இதை செய்யாமல், போராட்டத்தில் ஈடுபடுவதால் என்ன பயன் ஏற்படப்போகிறது? அதே நேரம் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்திக்கொள்கிறேன். எந்த சூழ்நிலையிலும், நீதிமன்றங்களின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த யாராலும் முடியாது. இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.
இதையடுத்து மனுதாரர் வழக்கறிஞர் புருஷோத்தமன், ‘நீங்கள் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி. வழக்கறிஞர்களுக்கு தந்தையை போன்றவர். உங்கள் பிள்ளைகள் சாலைகளில் நின்று போராட்டத்தை நடத்துகின்றனர். புதிய சட்ட திருத்த விதிகளின் அடிப்படையில் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்பதை பத்திரிகை செய்தி குறிப்பில்தான் கூறப்பட்டுள்ளது. அதுதொடர்பாக நீதித்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், தமிழக நீதித்துறையில் நிலவும் சூழ்நிலையை மாற்றலாம்’ என்றார்.
இவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, இதுதொடர்பான நீதித்துறை உத்தரவினை பிறப்பிக்கிறேன் என்றார். இதையடுத்து தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
வழக்கறிஞர்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய சட்ட திருத்த விதிகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று மனுதாரர் இடைக்கால கோரிக்கையை கேட்டுள்ளார். ஆனால், இந்த கோரிக்கையே பயனற்றதாகி விட்டது.
ஏன் என்றால், மனுதாரரின் கோரிக்கையை கடந்த 16-ந் தேதியே ஐகோர்ட்டு அனைத்து நீதிபதிகள் கூட்டத்திலேயே முடிவு செய்து விட்டோம். அதாவது, புதிய சட்டதிருத்த விதிகளின்படி, வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று முடிவு செய்துவிட்டோம்.
இதன் பின்னர், இந்த புதிய சட்டவிதிகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட 5 நீதிபதிகள் கொண்ட குழுவும் இதே முடிவினை கடந்த 22-ந் தேதி எடுத்துள்ளது. இந்த முடிவினை விளக்கமாக கடந்த 23-ந் தேதி பத்திரிகைகளுக்கு அறிக்கையாகவும் கொடுக்கப்பட்டது. எனவே, புதிய சட்ட திருத்த விதிகள் குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com