சோனியா காந்தி தலைமையில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கொண்டு வரப்பட்டதுதான் “ஆதார் அடையாள அட்டை” வழங்கும் திட்டம்.
இத்திட்டம் பயனற்ற திட்டம். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். குறிப்பாக வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யவேண்டிய நிலை ஏற்படும்போது இது மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதை நிரந்தர அடையாள அட்டையாக கருத முடியாது.
எனவே, இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று, இந்தியாவிலேயே முதன் முதலில் எதிர்ப்பு குரல் கொடுத்தவர் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாதான்.
மேலும், மத்திய அரசு கொண்டு வந்த, அரசு திட்டங்களின் மானிய பணத்தை மக்களுக்கு நேரடியாக வழங்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 27.04.2013 அன்று, அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பினார்.
அதையெல்லாம் சோனியாகாந்தி தலைமையிலான, மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில் ஆதார் அடையாள அட்டையில் உள்ள குளறுபடிகள் குறித்து, அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மீண்டும் ஒரு கடிதம் அனுப்பினார்.
அதை தொடர்ந்து பல்வேறு மாநில அரசியல் கட்சித் தலைவர்களும், ஆதார் அடையாள அட்டைக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
அப்போது எதிர்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி, இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக பாராளுமன்றத்தையே பலநாட்கள் முடக்கியது.
இத்திட்டத்தின் மூலம் 50 ஆயிரம் கோடி அரசுக்கு விரையம். தனியார் நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு காங்கிரஸ் பிழைப்பு நடத்துகிறது என்று, பாரதிய ஜனதா கட்சி மூத்தத்தலைவர்கள் அனைவரும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்கள்.
அப்போது குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோதி இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால், நரேந்திர மோதி பிரதமராக பதவியேற்றவுடன், ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவுகளை மதிக்காமல், ஆதார் அடையாள அட்டையை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகள் மற்றும் பணபறிமாற்றங்கள், எரிபொருள் மானியம், 100 நாள் வேலைத்திட்டம், வாக்காளர் அடையாளஅட்டை, ரெயில்வே முன்பதிவு, முதியோர், விதைவை மற்றும் மாற்றுத் திறனாளிகள் உதவிதொகை, ரேஷன்கடை மற்றும் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கும் “ஆதார் அடையாள அட்டை” அவசியம் என்று அப்பாவி மக்களை அலையவிட்டனர். ஆதார் அடையாள அட்டைக்காக இந்திய மக்கள் பட்ட கஷ்டங்களை, இங்கு வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
இந்த ஒரு காரணத்திற்காகவே, நரேந்திர மோதி தலைமையிலான ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை அவசியம் அல்ல என்று, உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆதார் அடையாள அட்டை பெற்று இருந்தால் தான் அரசின் மானியம் உள்ளிட்ட சலுகைகளை பெற முடியும் என்று மத்திய அரசின் நிறுவனங்கள் தெரிவித்து வந்தன.
ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.
அந்த வழக்குகளில் ஆதார் அடையாள அட்டைக்காக குடிமக்களின் கைரேகை, கண்ணின் மணியை பதிவு செய்வது என்பது தனிநபர் உரிமையை பறிக்கும் செயல் என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே, சி.நாகப்பன் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பாக 11.08.2015 அன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடினார். அவர், ‘‘இந்த வழக்கு விவகாரம் விரிவான விவாதத்துக்கு உரியது. அந்தரங்க உரிமை அடிப்படை உரிமையா? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு சீரற்ற முடிவுகள் ஏற்பட்டிருப்பதால், அதிகார பிரகடனம் தேவைப்படுகிறது.
எனவே, 2 அல்லது 3 நீதிபதிகள் அமர்வு இதை முடிவு செய்ய முடியாது. இதை கூடுதல் எண்ணிக்கையில் நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரிப்பதே பொருத்தமாக இருக்கும்’’ என கூறினார்.
அவரது வேண்டுகோளை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்குகளை விசாரித்து தீர்ப்பு அளிக்க அரசியல் சாசன அமர்வினை அமைப்பதற்கு தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டனர்.
அதே நேரத்தில் நீதிபதிகள் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்கள். அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது:–
* அரசின் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது. இதுபற்றி மின்னணு ஊடகங்கள் வாயிலாகவும், பத்திரிகைகள் வழியாகவும் விளம்பரப்படுத்த வேண்டும்.
* பொது வினியோக திட்டம் (ரேஷன்), மண் எண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் தவிர்த்து, பிற நோக்கங்களுக்கு ஆதார் அட்டை பயன்படுத்தப்படக்கூடாது.
* பொது வினியோக திட்டம், மண் எண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு கூட, இந்த ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது.
* ஆதார் அட்டைக்காக பதிவு செய்கிற தகவல்களை குற்ற வழக்கு விசாரணை தவிர்த்து பிற எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது. அதையும் கோர்ட்டு அனுமதி பெற்றுத்தான் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனால், இந்திய மக்கள் அனைவரும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசு, செபி, டிராய், ரிசர்வ் வங்கி மற்றும் சில மாநில அரசுகள் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களில், அரசு சார்ந்த சமூகநல திட்டங்களுக்கும், தங்கள் அமைப்புகளின் சேவைகளுக்கும் ஆதார் அட்டையை அனுமதிக்கும் வகையில் இடைக்கால உத்தரவில் மாற்றம் அல்லது விதிவிலக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், இடைக்கால உத்தரவில் மாற்றம் அல்லது விதிவிலக்கு கோரும் இந்த மனுக்கள் மீதும் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்விலேயே விசாரணை நடத்தலாம் என்பதே எங்கள் கருத்து என 07.10.2015 அன்று தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, இந்த மனு மீதான விசாரணையை உடனடியாக துவங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். முகுல் ரோத்தகியுடன் இணைந்து கேகே வேணுகோபால், ஹரிஸ் சால்வே ஆகியோரும் இதே கோரிக்கையை முன்வைத்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி 08.10.2015 அன்று அரசியல் சாசன அமர்வை அமைப்பது குறித்து முடிவு செய்வதாக தெரிவித்தார்.
அதன்படி 14.10.2015 மதியம் 2 மணிக்கு முன் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் 08.10.2015 அன்று அறிவித்தது.
அதன்படி 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்சநீதி மன்றம் அமைத்தது.
இந்நிலையில், ஆதார் அட்டை கட்டாயமில்லை என ஒருபுறம் கூறி வரும் மத்திய ஆட்சியாளர்கள், மறுபுறம் ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து வழங்கி, அரசு திட்டங்கள் அனைத்திற்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்க முயற்சித்து வருகின்றனர். ஆலயங்களில் ஆண்டவனை வழிப்படுவதற்கும் ஆதார் அட்டையை காண்பித்தால்தான் அனுமதி கிடைக்கிறது. இதை விட பெரிய கொடுமை வேறு என்ன இருக்க முடியும்?
வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட், பேங்க் பாஸ்புக், அஞ்சல்துறை அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட அடையாள அட்டை (100 நாள் வேலைத் திட்டம்) …. இப்படி எத்தனையோ அடையாள அட்டைகள் மக்களிடம் இருக்கும்போது, ஆதார் அட்டை மட்டும்தான் எங்களுக்கு வேண்டும் என்று ஆட்சியாளர்கள் அடம் பிடிப்பது எந்த வகையில் நியாயம்?
இதனால் மத்திய ஆட்சியாளர்கள் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் தொடர் தேர்தல் தோல்விக்கு இதுவும் முக்கிய காரணம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
சுதந்திர இந்தியாவில்தான் வாழ்கிறோமா? இல்லை ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் வாழ்கிறோமா? என்ற சந்தேகம் இயல்பாகவே இப்போது எழுந்துள்ளது.
ஏனென்றால், ஆதார் அட்டை அவசியமில்லை என்று, உச்சநீதி மன்றம் தெளிவாக உத்தரவுகள் பிறப்பித்தும் கூட, அதை மத்திய ஆட்சியாளர்கள் மதிக்காத போது, சாமானிய மக்கள் மட்டும் எப்படி சட்டத்தை மதிப்பார்கள்?
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com