ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்ட வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களுக்கும் 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களும், வாகனங்கள் மூலம் இன்று மதியம் திருப்பதி கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு, திருப்பதி 5வது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயா முன்னிலையில் கைதான 32 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள 32 பேர் மீதும், சட்டப்பிரிவு 109, 120, 120 பி ஆகிய ஆந்திர வனப் பாதுகாப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் 32 பேரையும் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி விஜயா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்கக்கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று (06.08.2016) கடிதம் எழுதியுள்ளார்.
அதில், திருவண்ணாமலை, வேலூர், சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த 32 தமிழர்களை கைது செய்திருப்பது கவலை அளிப்பதாகவும், அவர்கள் அனைவரும் வனத்துறை தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு தமிழர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதவிர, 32 பேரையும் விடுவிப்பது தொடர்பாக பேசுவதற்காக தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் இரண்டு பேரை ஆந்திராவுக்கு அனுப்பியிருப்பதாகவும் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com