காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு மனு தாக்கல் செய்தது.
கர்நாடக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவுக்கு ஏற்றதல்ல என்று கூறி, கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் மதிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர். கர்நாடகாவின் மனுவை நிராகரித்த நீதிபதிகள், செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நாள்தோறும் 12 ஆயிரம் கன அடி நீரை திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்க முடியாது எனவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்த வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com