சசிகலா புஷ்பா, தி.மு.க. எம்.பி. சிவாவை தாக்கிய விவகாரத்தால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், நெல்லை மாவட்டம் ஆணைகுடியை சேர்ந்த பானுமதி (வயது 22) தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், தானும் தனது அக்கா ஜான்சிராணியும், தூத்துக்குடியில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை பார்த்து வந்ததாகவும், அப்போது சசிகலாவின் கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் தங்களை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர். இதற்கு சசிகலா புஷ்பா, அவருடைய தாயார் உடந்தையாக இருந்தனர் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் பேரில் சசிகலாபுஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, சசிகலாபுஷ்பாவின் தாயார் கவுரி ஆகியோர் மீது புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சசிகலாபுஷ்பா உள்பட 4 பேரும் போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் ஆகியோரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. இதன்படி சசிகலா புஷ்பா நேரில் ஆஜரானார். இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் மதுரை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில், இன்று (14.09.2016) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மதுரை உயர் நீதிமன்ற கிளை சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர், மகன் பிரதீப்ராஜா, தாயார் கவுரி உள்ளிட்ட நால்வரின் முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், வக்காலத்தில் வேறு நபர் கையெழுத்திட்டது தொடர்பாக சசிகலா புஷ்பா மீது ஒத்தகடை காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com