உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் கர்நாடகத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. 20-ந் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 21-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி உச்ச நீதிமன்றம் கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.
இதற்கு கர்நாடகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 23.09.2016 அன்று கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு காவிரியில் தண்ணீர் திறப்பது இல்லை என்றும், காவிரி படுகையில் இருக்கும் 4 அணைகளில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பிரதமர் நரேந்திர மோதிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
“21-ந் தேதி முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் 27-ந் தேதி வரை 7 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கும்படி 20-ந் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் காவிரி படுகையில் இருக்கும் 4 அணைகளில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சட்டசபையின் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த தீர்மானத்தை உச்ச நீதிமன்றத்தில் 26-ந் தேதி தாக்கல் செய்ய உள்ளோம். 20-ந் தேதி தண்ணீர் திறக்குமாறு பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்குமாறும் கோர உள்ளோம்.
உச்ச நீதிமன்ற உத்தரவில், தண்ணீர் கணக்கீட்டு அளவு 27-09-2016 முடிய தண்ணீர் கணக்கீடு செய்வதாக கூறியுள்ளதை மாற்றி 2017 ஜனவரி மாதம் முடிய தண்ணீரை கணக்கீடு செய்யுமாறு கேட்போம். உச்ச நீதிமன்றத்தின் எந்த உத்தரவையும் அவமதிக்கும் நோக்கம் எனது அரசுக்கு இல்லை.” இவ்வாறு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அரசமைப்பு சட்ட விதிகளை மீறும் வகையில் இருப்பதாக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
அரசமைப்புச் சட்ட விதி எண் 144-இன் கீழ், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அரசு நிர்வாகம், நீதித்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதன்படி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், அந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடக பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை, அரசமைப்புச் சட்ட விதிகளை மீறும் செயலாகும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கர்நாடக அரசு முடிவெடுக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு ஆய்வு செய்யவும் முடியாது. அரசு நிர்வாகமே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பின்பற்றாவிட்டால், நாட்டில் அது மிகவும் மோசமான முன்னூதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் நீர் திறக்காதது நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்று கர்நாடக அரசுக்கு, தமிழக தலைமைச் செயலர் ராம மோஹன ராவ் கடிதம் எழுதியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு ஆறு ஆயிரம் கன அடி நீர் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறி இருப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். இவ்வாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com